2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'இஸ்ரேல் நாட்டின் நலன் பாதுகாப்பு பிரிவினை அமைப்பதால் முஸ்லிம்களின் மனங்களை பாதிக்கும்'

Niroshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,பைஷல் இஸ்மாயில்

இஸ்ரேல் நாட்டின் நலன் பாதுகாப்பு பிரிவை இலங்கையில் அமைப்பதற்கான செயற்பாடுகள், இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் மனங்களை பாதிக்குமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

இலங்கையில் இஸ்ரேல் நாட்டின் நலன் பாதுகாப்பு பிரிவினை அமைப்பதற்கு எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பில் இன்று(27)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

 இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இஸ்ரேல் நலன் பாதுகாப்பு பிரிவு இலங்கையில் அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்பினைத் தெரிவிக்கவேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இஸ்ரேல் நலன்புரி நிலையம் அமைப்பதற்கு முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்திலும் இவ்வாறான முன்னெடுப்புகளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இவரது இந்த முயற்சிகளைக் கண்டித்து அப்போது இலங்கையில் முஸ்லிம்கள் தங்களின் உணர்வு ரீதியான எதிர்ப்புக்களையும் ஆர்ப்பாட்டங்களையும் செய்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப், அன்று அரசியல் அதிகாரம் எதுவுமில்லாத சூழ்நிலையில் எங்களைக் காப்பாற்றினார். நமது நாட்டில் நிரந்தரமான அமைதி ஏற்படுவதற்கு முஸ்லிம்கள் தங்களின் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன் ,நமது நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இந்தநாட்டில் பெரும்பான்மையான முஸ்லிம்களின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட ஆட்சிமாற்றம் ஒருவருடம் கடந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் நிறைவுசெய்யப்படாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் இலங்கையில் அண்மைக்காலமாக நடைபெற்றுவருகின்றமை குறித்து நாம் எல்லோரும் கவலைப்படவேண்டியுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X