Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
'கிழக்கின் எழுச்சி' என்பது பிரதேசவாத நோக்கம் கொண்ட சிந்தனையல்ல. அது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை நம்பி ஏமாந்த மக்களின் உண்மையான உணர்வலையென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல் ஹக்கின் 'முஸ்லிம் அரசியலின் இயலாமை' எனும் நூல் வெளியீட்டு விழா, கொழும்பு வை.எம்.எம்.ஏ.மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இவ்விழாவில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒருபோதும் பிரதேசவாத சிந்தனை கொண்டவர்களாக இருந்ததில்லை. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மரணமடைந்த பின்னர், தென்னிலங்கையைச் சேர்ந்த ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் ஏகமனதான அங்கிகாரத்துடன் மு.கா. தலைவராக்கப்பட்டதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எந்தவித எதிர்பார்ப்புமின்றி தலைவராக்கப்பட்ட ரவூப் ஹக்கீமை தமது சமூகத் தலைவனாக ஏற்றிருந்த கிழக்கு மாகாண முஸ்லிம்கள், இந்தச் சமூகத்துக்காக அவர் எதுவும் செய்யவில்லை என்பதையும் சமூக நலன் சார்ந்த விடயங்களில் அத்தலைமைக்கு எவ்வித கரிசனையும் கிடையாது என்பதையும் உணர்ந்ததன் வெளிப்பாடே கிழக்கின் எழுச்சியாக உருவெடுத்திருக்கிறது. அந்த உணர்வலையை எவரும் குறைத்து மதிப்பிட்டு மலினப்படுத்த முடியாது' என்றார்.
'முஸ்லிம் சமூகத்துக்கான தலைமை என்பது நாட்டின் எந்த மூலைமுடுக்கிலிருந்தும் உருவாகலாம். அது கிழக்கிலிருந்தே வரவேண்டுமென்று கிழக்கு மாகாண மக்கள் கோஷமிடவில்லை. சமூகத்தின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவதில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமின் இயலாமை வெளிப்பட்டுள்ளதன் எதிரொலியே கிழக்கின் எழுச்சி என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எமது மூத்த எழுத்தாளர், சமூக ஆய்வாளர் எழுதியுள்ள முஸ்லிம் அரசியலின் இயலாமை எனும் நூல் அதனையே பறைசாற்றுகின்றது.
இன்று வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒற்றைக்காலில் நிற்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதையே வலியுறுத்துகின்றது. அதற்கான முஸ்தீபுகள் திரைமறைவில் நகர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால், இது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வாய்மூடி மௌனியாக இருக்கிறது. ஏன் இந்த இயலாமை? இந்த ஆபத்தை உணர்ந்தே கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இன்று கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அபாயகரமான சூழ்நிலையிலிருந்து முஸ்லிம்களை காப்பாற்றுவது எப்படி? எமது அடுத்த சந்ததியினரின் எதிர்காலம் என்ன என்பன தொடர்பில் கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் சமூக அமைப்புகள் சிந்திக்க தொடங்கியுள்ளன.
வடக்கையும் கிழக்கையும் மீள இணைக்கச் சொல்வதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எந்த அருகதையும் கிடையாது. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தலைவிதியை அவர் தீர்மானிக்க முடியாது. இது விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அதன் தலைவர் ரிஷாட் பதியுதீனும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதுடன் அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார்' என்று மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
18 May 2025