2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'கிழக்கு மாகாணம் எட்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அண்மையில் வெளியிடப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மட்டத் தரப்படுத்தலில் கிழக்கு மாகாணம் எட்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாணச் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மேலும், இம்மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் 13ஆவது இடத்திலும் மட்டக்களப்பு மாவட்டம் 17ஆவது இடத்திலும் திருகோணமலை மாவட்டம் 24ஆவது  இடத்திலும் பட்டியல் இடப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் கூட கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் இந்தளவு பின்னடைவு ஏற்பட்டிருக்கவில்லை. இது தொடர்பில் தாம் அதிர்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'தேசிய தரப்படுத்தலில் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்திருந்த மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம், இம்முறை ஏழாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளமைக்கான  காரணங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும்' என்றார்.  

'கிழக்கு மாகாணக் கல்வித்துறையில் தேவையற்ற அரசியல் தலையீடுகள் பல மட்டங்களில் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்களின் சுயாதீனச் சிந்தனையும் செயற்பாடுகளும் மழுங்கடிக்கப்படுகின்றன.
அதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் தகுதியான அதிபர்கள் இல்லை. இன்னும் பல பாடசாலைகளுக்கு தகுதியானவர்கள் இருந்தும் பொறுப்புகள் வழங்கப்படாமல் முடக்கப்பட்டுள்ளனர். மேலும், சில பாடசாலைகளில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தும், அவர்களுக்கு உரிய பாடங்கள் வழங்கப்படாமல் தடுக்கப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான காரணங்களே கிழக்கு மாகாணக் கல்வித்துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன என்று நாம் கருதுகின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X