2025 ஜூலை 05, சனிக்கிழமை

'சுமந்திரனின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது'

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல். மப்றூக்

ஜெனீவா கூட்டத் தொடரில் 2012ஆம் ஆண்டு, அரசாங்கத்தின் நீதியமைச்சராக முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பங்குகொண்டமையானது, தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்று கூறப்படுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை நினைவுகூறும் வகையில், கொழும்பில் வெள்ளிக்கிழமை(30) முஸ்லிம் காங்கிரஸினால்; கருத்தங்கொன்று நடத்தப்பட்டது. இந் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமையின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உரையாற்றினார்.

அதன்போது, ஜெனீவா கூட்டத்தொடரில் 2012ஆம் ஆண்டு ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டமையானது, தமிழ் மக்களுக்கு எதிராக செய்த காட்டிக் கொடுப்பு நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துக் தெரிவிக்கும் போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸினுடைய அரசியல் தீர்மானங்கள், தமிழ் தரப்புக்களால் பல தடவை விமர்சிக்கப்படுகின்றவையாகவும், ஜீரணிக்க முடியாதவையாகவும் இருந்தமையினை நாங்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமையின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை தன்னுடைய தவறுகளையும் ஒப்புதலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் பாணியில் சில கருத்துக்களை முன்வைத்தார்.இதுகுறித்து எமக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது.

மு.கா தலைவர்,நீதியமைச்சர் என்கிற அந்தஸ்த்தில் இருந்து கொண்டு, நீதியமைச்சு சார்ந்த விடயங்களுக்கு பதில் கூற வேண்டியிருந்ததால்தான், அப்போது நான் ஜெனீவா செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தது.

மேலும், ஜெனீவா கூட்டத் தொடர் கருத்தாடல்களின்போது, பூரணமானதொரு மனித உரிமை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து நான் வலியுறுத்தியிருந்தேன் என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இவற்றையெல்லாம் விட்டு விட்டு, ஐ.நா.சபையின் கூட்டத் தொடரில் ஒரு நீதியமைச்சராக நான் கலந்துகொண்டமைய மட்டும் ஒரு பாரிய காட்டிக் கொடுப்பாக சித்தரிக்க முயற்சிப்பதானது நியாயமானதல்ல.

இருந்தபோதும், மேலெழுந்த வாரியாகப் பார்க்கின்றபோது, ஜெனீவா கூட்டத் தொடரில் நான் பங்குபற்றியமையானது தமிழ் சமூகத்தின் மத்தியிலும், அதன் தலைமைகள் மத்தியிலும் உறுத்தலாக உள்ளதையும் நான் உணர்கின்றேன் என்றார்.                                                                                                                                                                                                                                                                
                                       
                                                             

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .