2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'சம்மாந்துறையில் யானைகளின் தொல்லைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 25 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேசத்தில் யானைகளின் தொல்லைகளைக் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், யானைகளின் தாக்குதல்களினால் சேதமடைந்த உடைமைகளுக்கான    இழப்பீட்டை அதிகரித்து வழங்கவேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை அமர்வு திருகோணமலையில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது. இதன்போது,  கிழக்கு மாகாணத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் வீடுகளுக்கு சமூகசேவை திணைக்களத்தினால் வழங்கப்படும் இழப்பீட்டுத்;தொகையை அதிகரிக்க வேண்டுமென்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனிநபர் பிரேரணையை முன்வைத்தார். இந்தப் பிரேரணையை வரவேற்று ஐ.எல்.எம்.மாஹிர் உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அண்மையில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் யானைகளின் தாக்குதல்கள் காரணமாக  பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன்,  உடைமைகளும் சேதமாக்கப்பட்டன. எனவே, யானைப் பிரச்சினையால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் யானைகளினால் ஏற்படும் பிரச்சினைகளை தடுத்துநிறுத்துவதற்கு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து மாகாணசபையும் பொறிமுறையொன்றைக் கொண்டுவர வேண்டும்' என்றார்.
 
'அனர்த்தங்களினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டுமென்று தனிநபர் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்படவில்லை. அதற்கான தொகையையும் குறிப்பிட்டு திருத்தத்தை பிரேரணையில் கொண்டுவர வேண்டும்' என்றார்.

தற்போது அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற இழப்புகளுக்கு 20,000 ரூபாய் நஷ்டஈடாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X