2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'தேசிய மாநாட்டை பாலமுனையில் நடத்தியே தீருவோம்'

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டை பாலமுனையில் நடத்த முடியாது - மு.கா.தலைவருக்கு பாலமுனை பொது மக்கள் கடிதம் என்ற தலைப்பில் ஒரு அனாமோதய செய்தியை ஊடகங்களில் வெளியிட்டு பாலமுனை மண்ணுக்கு சில விசமிகள் துரோகமிழைத்துள்ளதாக பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு செயலாளர் ஐ.எல்.எம். இன்று (18) பாயிஸ்  தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையைில்,

 இம்மாநாட்டை முகாமை செய்யக் கூடிய விதத்திலான அடிப்படை வசதிகளோ காலநிலைப் பொருத்தப்பாடுகளோ சூழல் அமைப்புக்களோ மற்றும் ஏனைய வசதி வாய்ப்புக்களோ கிடையாது. அதனால், இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆதரவாளர்கள் அவதிப்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

எனவே, இம்மாநாட்டை சகல வசதிகளும் பொருத்தப்பாடுகளும் கொண்ட நிந்தவூரில் நடத்துவதே சாலப் பொருத்தமானது என்ற அடிப்படையில் அச்செய்தி அமைந்துள்ளது.

இம்மாநாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் இவ்வேளையில், அம்மாநாட்டை குழப்பும் நோக்கில் சில விஷமிகளால் பாலமுனை பொதுமக்கள் என்ற தலைப்பில் இச்செய்தியை பிரசுரம் செய்தவர்கள் உண்மையில் பாலமுனையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பாலமுனையில் பற்றுள்ளவர்களாக ஒரு போதும் இருக்க முடியாது.

மேலும், இவர்கள் தற்போதைய காலகட்டத்தில் இக்கிராமத்தில் மு.காவின் அரசியலை மிகவும் பக்குவமான முறையிலும் வெளிப்படைத் தன்மையான விதத்திலும் கொண்டு செல்கின்ற இளம் தலைமையான சட்டத்தரணி சகோ.எம்.ஏ.அன்சிலின் அரசியல் தலைமையின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவுமே இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

இம்மாநாட்டின் மூலம் தங்களுக்கு எந்த இலாபமும் ஈட்ட முடியாது. அதனால் பேரும் புகழும் நமக்கு கிடைக்காது என்ற உள் நோக்கமும் அவர்களிடமுண்டு. அதனால்தான் அவர்கள் பாலமுனை மக்களின் விருப்பத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் முரணான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த மாநாடு, எம்.ஏ.அன்சிலின் தனிப்பட்ட நலனை மேம்படுத்தும் நோக்கிலும் அவரது விருப்பத்தை பூரணப்படுத்தும் நோக்கிலும் நடத்துவதற்கு கட்சியின் தலைமையால் அனுமதிக்கப்பட்ட ஒன்று, என்று நினைக்கும் அளவுக்கு கட்சியின் தலைமையும் அதன் உயர் பீடமும் சிறுபிள்ளைத்தனமான முடிவுகளை எடுக்கவில்லை.

மாறாக, மிக நீண்ட காலமாக இக்கிராமத்தில் கட்சியின் மாநாட்டினை நடத்த வேண்டும் என்ற தற்போதைய தலைவரின் எண்ணமும் அதற்கான நியாயங்களான கட்சியின் அடிமட்ட போராளிகளை அதிகமாகக் கொண்டதும் இப்பிராந்தியத்தில் ஒரு மத்திய கிராமமாக இருக்கின்றதாலேயே அதற்கான அனுமதி கட்சியின் தலைமையால் வழங்கப்பட்டது.

மேலும், 'பாலமுனையில் பால் நிலவு' என்ற தோரணையில் ஒரு பிரமாண்டமான கட்சியின் நிகழ்வு தனது பங்கேற்ப்புடன் நடத்தப்படல் வேண்டும் என்ற மறைந்த மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களினது ஆசையை ஈடுசெய்யும் விதத்திலும் இம்மாநாடு பாலமுனையில் நடத்தப்படவுள்ளது என்பதனை இந்த பாமரத்தனமான கருத்துக்களை பரப்புபவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X