Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 07 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யூ.எல்.மப்றூக்
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் அமைந்துள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிலங்களை அரசாங்க அதிகாரிகள் சிலர் மோசடியாகப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்; ஹக்கீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், அப்பிரதேச செயலக மண்டபத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
ஒலுவில் கிராமத்தில்; அமைந்துள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 21 ஏக்கர் பரப்பளவுள்ள காணியில் 06 ஏக்கர் 02 றூட் அளவான காணித்துண்டுகளே இவ்வாறு மோசடியாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய முன்னாள் பிரதேச செயலாளர் ஒருவர், முன்னாள் உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் இருவர் உள்ளிட்ட சிலர் மேற்படி காணியினை மோசடியாகப் பெற்றுள்ளமை குறித்து அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தின்போது, அமைச்சரிடம் பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், குறித்த காணிகளை அவர்களிடமிருந்து மீட்டு அவற்றினை ஒலுவில் கிராமத்தின் பொதுத் தேவைக்காகக் கையளிக்க வேண்டுமெனவும் இதன்போது அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், 'அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளை அவ்வாறு மோசடியாக யாரும் அபகரிக்க முடியாது என்பதைச் சுட்டிக் காட்டியதோடு, இவ்விடயம் தொடர்பில் நீண்டகாலமாக புகார் தெரிவிக்கப்பட்டு வருவதால், இது குறித்து ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேற்படி காணி மோசடி தொடர்பில் கடந்த ஆட்சியின்போதும் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
குறித்த காணி ஏக்கரொன்று 60 இலட்சம் ரூபாய் பெறுமதியாகவுள்ள நிலையில், ஏக்கர் ஒன்றுக்காக 01 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்குட்பட்ட தொகையை மட்டும் செலுத்தி, மேற்படி அரசாங்க அதிகாரிகள் மோசடியாகக் கையகப்படுத்தியிருந்தனர் என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், காணியினை உரிமைப்படுத்துவதற்காக இவர்கள் மோசடி ஆவணங்களைத் தயாரித்து வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இந்த வகையில் மொத்தமாக 03 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணித்துண்டுகளைக் கையகப்படுத்திக் கொள்வதற்காக 07 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவை மட்டும் மேற்படி நபர்கள் அரசாங்கத்துக்குச் செலுத்தியுள்ளனர்.
மொத்தமாக 22 பேர் மேற்படி காணித்துண்டுகளை இவ்வாறு மோசடியாகக் கையகப்படுத்தியுள்ளனரெனக் கூறப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அட்டாளைச்சேனை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகங்களில் கடந்த ஆட்சிக் காலத்தின்போது விசாரணைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினை கலைத்து விட்டமையினால், குறித்த காணி மோசடி தொடர்பான விசாரணைகளும் கைவிடயப்பட்டது. இருந்தபோதும், இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரியமைக்கு அமைவாக இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதித் தவிசாளர் சபீக் ரஜாப்தீன், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, மு.காங்கிரசின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் எஸ்.எல்.எம். பழீல் உட்பட, திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .