2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'நல்லாட்சி அரசாங்கம் வேட்டு வைக்காது'

Gavitha   / 2016 ஜனவரி 04 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் மௌலானா

சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் வேட்டு வைக்காது என்று முஸ்லிம் விவகார, தபால் சேவைகள் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசாரச் செயலாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.

சனிக்கிழமை (02) மாலை ஐ.தே.க.வின் சாய்ந்தமருது காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கடந்த ஆட்சிக் காலத்தின் போது, தமிழ், முஸ்லிம் மக்கள் நசுக்கி ஒடுக்கப்பட்டதை நாம் இலகுவில் மறந்து விட முடியாது. சிறுபான்மையினர் மீது கருணை காட்டாமல் இருந்த ஒரு கொடுங்கோல் ஆட்சி, எமது நாட்டில் இனி ஒருபோதும் ஏற்பட இடமளிக்கக் கூடாது.

சிறுபான்மையினரின் உரிமைகளை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், ஐ.தே.க.வினால் தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பைத் தந்தபோதிலும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாட்டின் பிரதான கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்ற தூர நோக்கிலேயே சுதந்திரக் கட்சியையையும் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கத்தை பிரதமர் நிறுவினார்.

ஆனால் மஹிந்த தரப்பினர் சிறு சிறு பிரச்சினைகளை பூதாகரமாக்கி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றனர். அவர்கள், மக்கள் மத்தியில் நல்லாட்சி தொடர்பில் பிழையான கருத்துகளை விதைத்து வருகின்றனர்.

இந்த சதிகளை முறியடித்து நல்லாட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கட்சி ஆதரவாளர்களை மாத்திரமல்லாமல் நாட்டின் அனைத்து பிரஜைகளையும் சாரும். அதற்காக மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைளை கட்சி ஆதரவாளர்கள் முன்னெடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X