2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'பகிடிவதையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாதிப்பு'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 10 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதோடு, பகிடிவதையால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அமையுமென தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய அரபு மொழி பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் 'பகிடிவதையை பல்கலைக்கழகங்களிலிருந்து ஒழிப்போம்' எனும் பிரகடனமும் இன்று வெள்ளிக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடந்து உரையாற்றுகையில், 'பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையினால் கல்வி சீரழிந்து செல்வதோடு உயர் கல்விக்கும், அரசாங்கத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயற்படுவதையிட்டு இங்குள்ள மாணவர்களை பாராட்டுகின்றேன்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழிப் பீடம் பல்கலைகழகங்களின் வரலாற்றில் இவ்வாறான பகிடிவதையை பல்கலைக்கழகங்களில் இல்லாமல் ஒழிப்பதற்கு ஒரு முன்மாதிரியான செயற்பாட்டை முன்கொண்டு வந்துள்ளமை நம் எல்லோருக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தொடர்பாக நல்ல அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டுமே தவிர வெறுமெனே பகிடிவதை என்ற போர்வையில் கல்வியை சீரழிக்கக் கூடாது.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகடிவதைகளை ஒழிப்பதற்கு ஒவ்வொரு மாணவரும் இன்றிலிருந்து திட சந்தர்ப்பம் பூண வேண்டும். இதன் மூலம் தான் எமது நாட்டுக்குத் தேவையான கல்வி வளத்தை வழங்க முடியும்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள ஏனைய பீடங்களில் பயிலும் மாணவர்களும் இவ்வாறான நல்ல செயற்பாடுகளை செய்வதற்கு முன்வந்துள்ளார்கள்.

அரசாங்கம் எமது கல்விக்கு கூடுதலான பணத்தை செலவு செய்து வருகின்றது. அதனை நாம் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. இதனை சரியான முறையில் பயன்படுத்தி எமக்குத் தேவையான கல்வியைப் பெற வேண்டும்.
எனவே, எதிர்காலத்தில் இப்பல்கலைக்கழகம் பகிடிவதையற்ற பல்கலைக்கழகமாக மாறும் என்பதில் ஐயமில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X