2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'பல்லின மக்களுள்ள இந்நாட்டுக்கு கூட்டாட்சியெனும் அரசியலமைப்பு வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா

பல்லினச் சமூகங்கள் வாழும் இந்நாட்டுக்கு கூட்டாச்சி முறையில் அரசியல் அமைப்பு அமைக்கப்பட வேண்டும். இந்நிலைமையே பல்லினம் கொண்ட நாட்டின் அனைவரது  நல்வாழ்வுக்கான தீர்வாக அமையும் என்பதே தமது நிலைப்பாடு என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று டி.எப்.சி. ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 'சிறுபான்மையினரின் அரசியல் என்ற பதம், இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னர் அரசியல் வரலாற்றில் எழுதப்பட்ட ஒன்றாகும். 1915ஆம் ஆண்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான முதலாவது இனக்கலவரத்தின் மூலம் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. இதேபோன்று, 1947க்கு பின்னர் 10 இலட்சம் மலை நாட்டு மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியென்பதற்கு அப்பால், மனிதனின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்ட பிரச்சினையாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து எமது உரிமைகளை நாமே பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி 1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அன்று தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து சிறுபான்மை மக்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட்டது. அன்று போன்று, மீண்டும் நாம் ஒன்று சேர வேண்டும். இதற்காக இன்று எமது தமிழரசு கட்சியினால் ஒரு கொள்கைப் பிரகடனம் கொண்டுவரப்பட்டது. அதில், வடக்கில் ஒரு சபையும் வடக்கு வெளியே கிழக்கில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சபைகளை உருவாக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றோம். அதற்கு, இந்த நாட்டில் கூட்டாச்சி எனும் அரசியல் அமைப்பு அமைக்கப்பட வேண்டும்.

இதுதான் இந்த பல்லினம் கொண்ட நாட்டின் நல்வாழ்வுக்கான சிறந்த அரசியல் அமைப்பாக இருக்கும் என்பது எமது கட்சியின் அரசியல் நோக்கமாக அன்று முதல் இன்றுவரை உள்ளது. இதற்கு நாம் தமிழர் தரப்புக்கள் தயாராக இருக்கின்றோம்' என துரைராசசிங்கம் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X