2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'முஸ்லிம் எம்.பி. கள் விலை போகாதவாறு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 10 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அரசியலமைப்பு சீர்திருத்த விடயத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தச் சக்திக்கும் விலை போய்விடாதவாறு அழுத்தங்களை பிரயோகிக்க சிவில் சமூகம் தயாராக வேண்டுமென கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் முக்கியஸ்தர் இஸட்.ஏ.எச்.நதீர் மௌலவி தெரிவித்தார்.

கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவையின் மாதாந்த செயற்குழுக் கூட்டம், சாய்ந்தமருது யுனைட்ஸ் லங்கா கல்வி நிறுவன மண்டபத்தில் சனிக்கிழமை (09) இரவு  நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'நல்லாட்சி அரசாங்கம் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பை முற்றாக மாற்றியமைப்பதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக பிரகடனம் செய்துள்ளது. ஆனால், இந்த அரசியலமைப்பு மாற்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம் எவ்வாறு அமையப்போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்தின்போது தேர்தல் முறை மாற்றத்தில் மட்டுமல்லாமல் மற்றும் சில முக்கிய விடயங்களிலும் முஸ்லிம் சமூகம் பாரிய ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படப் போவதாகக் கூறப்படுகின்றது. எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே முஸ்லிம்களுக்கு சாதகமானது என்பதை கடந்தகால வரலாறு நிரூபிக்கின்றது.

ஜனாதிபதி முறைமையிலுள்ள கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அந்த முறைமை நீடிக்கப்படுவதே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.

'இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தளவில் வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைத்துவிட்டு அதற்குள் முஸ்லிம் அலகொன்றைப் பெற்றுக்கொள்வது என்பது தவறான சிந்தனையாகும். தற்போது கிழக்கு மாகாணம் பிரிந்துள்ள நிலையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும் ஆட்சியாளராகவும் இருக்கிறோம். இவ்வாறு இருக்கத்தக்கதாக அதனை வடக்குடன் இணைத்து, தாரை வார்த்துவிட்டு முஸ்லிம் அலகு பற்றிப் பேசுவது ஆபத்தான தீர்வாகும். வடக்கு - கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியம் உறுதியாக இருக்கின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்தியில் இது விடயத்தில் ஒருமித்த உறுதியான நிலைப்பாடு கிடையாது.

இவற்றையெல்லாம் உள்ளடக்கி தயாரிக்கப்படப் போகின்ற புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் உரிமைகளும் நலன்களும் எவ்வாறு உத்தரவாதப்படுத்தப்பட போகிறது என்பதில் பலத்த அச்சம் ஏற்படுகிறது. இது விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத் தலைவிதியானது முழுக்க முழுக்க முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் தங்கியிருக்கிறது.

ஆனால், அரசியலமைப்பு தொடர்பில் பெரும்பாலான முஸ்லிம் உறுப்பினர்களிடம் போதிய தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் விலை போகக்கூடிய ஆபத்து காத்திருக்கிறது. 18ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் அவர்கள் செயற்பட்ட விதம் எமக்கு நல்ல வரலாற்றுப் படிப்பினையாகும். அன்று அதிகாரத்துக்கு அடிபணிந்து துணை போனார்கள். இப்போது நன்கொடைகளுக்கு சோரம் போகக்கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X