2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'முஸ்லிம் சமூகம் பெற்ற அனுகூலம் குறைவு'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 01 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

இந்த நல்லாட்சியில் தமிழ் மற்றும் மலையகச் சமூகங்கள் பெற்றுக்கொண்டுள்ள அனுகூலங்களை விட, முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொண்ட அனுகூலங்கள் குறைவானது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச விவசாயிகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
'வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகத்தின் இயல்பு வாழ்வுக்குத் தடையாக இருந்த இராணுவக் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் பல்வேறு வழிகளில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு அதிகாரபூர்வ தீர்வு வழங்கும் பொருட்டு யாப்பு மாற்றம் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோன்று, மலையகச் சமூகத்துக்கான வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த பாரிய அனுகூலங்கள் என்று குறிப்பிட்டுக் கூறுமளவு எதுவும் இல்லை. கிழக்கில் மாத்திரம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 20,000 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இன்னும் ஒரு இஞ்சி நிலம் கூட விடுவிக்கப்படவில்லை.

ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்கள் வசித்து வந்த பூர்வீகக் காணிகள், யுத்தத்தினால் அவர்கள் குடிபெயர்ந்த பின்னர் காடுகளாக மாறியிருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்து குடியேறுவதிலிருந்தும் தடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பில் மாத்திரம் சுமார் பதினைந்து கிராமங்கள் இவ்வாறு இருக்கின்றன. முஸ்லிம்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வதற்கு முடியாமல் நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே தடுக்கப்படுகின்றன. பொத்துவில் பிரதேச முஸ்லிம் விவசாயிகளுக்குச் சொந்தமான லா{ஹகல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ரத்தல் கண்ட பள்ளியடி வட்டையில் அமைந்துள்ள சுமார் 127 ஏக்கர் விவசாயக் காணிகளில் கடந்த பெரும்போக விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்ட போதிலும், இந்தப் பெரும் போகத்தில் விவசாயம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, பொத்துவில் விவசாயிகளுக்குச் சொந்தமான கிராங்கோமாரி விவசாயக் காணிகளின் பிரச்சினை, அக்கரைப்பற்று விவசாயிகளுக்குச் சொந்தமான வட்டமடு விவசாயக் காணிகளின் பிரச்சினை, அட்டாளைச்சேனை அஷ்ரப் நகர் விவசாயக் காணிகள் பிரச்சினை, சம்மாந்துறை கரங்காவட்டை விவசாயக் காணிகள் பிரச்சினை, புல்மோட்டை அரிசிமலை நிலப்பிரச்சினை, தோப்பூர் குடியேற்ற நிலப்பிரச்சினை என எந்தப்பிரச்சினைக்கும் முஸ்லிம்களுக்கு இதுவரை எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X