2025 மே 19, திங்கட்கிழமை

'விசேட நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

நல்லாட்சி அரசாங்கம் காணாமல் போனவர்களை விசாரிக்கும் விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைத்து விசாரணை மேற்கொண்டு எனது மகன் காணாமல் போனது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டுமென ஆலையடிவேம்பு கண்ணகிபுரத்தில் வசிக்கும் சுப்பையா கமலநாதன் (வயது-54) தெரிவித்தார்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கு அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு கண்ணகிபுரம் வித்தியாலயத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (16) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், '2000ஆம் ஆண்டு எனது மகனான கமலநாதன் பிரதீபன் (வயது-20) என்பவரும் அவருடன் 05 இளைஞர்களும் நீத்தப் பிரதேசத்திற்கு மேசன் தொழிலுக்கு சென்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.

பின்னர் 2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் 29ஆம் திகதி எனது மகன் புலிகளிடமிருந்து தப்பி வந்த நிலையில் கண்ணகிபுர பிரதேசத்தில் அமைந்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் காரியாலயத்திலிருந்த ஜெயராம் என்பவர் எனது மகனை பிடித்து திருக்கோவில் பிரதேசத்தில் இருந்த இனிய பாரதியிடம் ஒப்படைத்தார்.

அந்த நேரத்தில் எனது மகன் திருக்கோவில் பிரதேசத்தில் கை கட்டப்பட்ட நிலையில் நான் என் கண்ணால் கண்டேன். பொலிஸில் முறைப்பாடு செய்தால் மகனை கொன்றிடுவோம் என்று அச்சுறுத்தினார்கள் இதனால் நான் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.

இரண்டு மாத காலமாக எனது மகனை தருமாறு இனியபாரதியிடம் சென்று மண்டியிட்டேன். அவர் எனது மகனை தரவில்லை இறுதியாக உனது மகன் கொல்லப்பட்டுவிட்டார் என கூறினார்கள். எனது மகனைக் கேட்டதற்காக என்னை துப்பாக்கி தாக்கியதால் தற்போது ஊனமுற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றேன்.என்னால் ஒரு தொழிலும் செய்ய முடியாது.
எனது குடும்பத்தை காப்பாற்றி வந்த எனது மூத்த மகன் காணாமல் போனதிற்கு முழுக்காரணமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளே.

எனது பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் கண்டறிய வேண்டும். விசேட நீதிமன்றம் அமைத்து எனது மகன் காணாமல் போனதற்கு யார் காரணமோ அவர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் எனது ஆத்மா சாந்தியடையும். மிகவும் வறுமையில் வாழும் எனது குடும்பத்திற்கு அரசாங்கம் இழப்பீட்டுத் தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்' கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X