2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை வாஞ்சையோடு அழைக்காமை கவலையளிக்கின்றது'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளினால் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்;களை மீண்டும் பிறந்த மண்ணுக்கு வாருங்கள் என இன்னும் வாஞ்சையோடு அழைப்பு விடுக்காமல் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைகளும் புத்திஜீவிகளும் மௌனமாக இருப்பது கவலையளிப்பதாக கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர்  தெரிவித்தார்.

இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், '1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட இந்த முஸ்லிம்கள் அநுராதபுரம், புத்தளம், குருநாகல், பாணந்துறை போன்ற பிரதேசங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தார்கள். கடந்த 25 வருடங்களாக இவ்வாறு வாழ்ந்து வருபவர்களில் சிலர் 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் யுத்தம் நிறைவடைந்து அமைதி, சமாதானம் ஏற்படத் தொடங்கியதையடுத்து மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வாழ்ந்து வருகின்ற போதிலும், பெரும்பாலான முஸ்லிம்கள் இன்னும் அகதி முகாம்களிலும், கூடாரங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

வடமகாண சபையில் எத்தனையோ பிரேரணைகள் நிறைவேற்றியுள்ளார்கள். விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர்களை வடக்கில் அவர்கள் பிறந்த மண்ணுக்கு குடியிருந்த வீடுகளுக்கு வரவேண்டும் என்ற பிரேரணையை  நிறைவேற்றி நல்லெண்ணத்தை வெளிக்காட்ட முடியாமல் போனதற்கான காரணம் என்ன? வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக்குடியமர்த்தவோ, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்கவோ கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த அரசு கூடியளவு அக்கறை காட்டவில்லை. நல்லாட்சி நடத்துகின்றோம் என்று கூறும் இன்றைய அரசாங்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை தங்களுக்கு தேவையான வசதி வாய்ப்புக்களை செய்து தருகின்றோம் தங்களது சொந்த இடங்களில் வந்து குடியமருங்கள் என்று அழைப்பு விடுக்கலாம் என்றால் ஏன் வடக்கிலிருந்து அரை நூற்றாண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலுள்ள அகதி முகாம்களில் வாழும் முஸ்லிம்களை தங்களது பிறந்த மண்ணிற்கு வாருங்கள் என்று அழைக்காமல் இருக்கின்றது.

சிறைச்சாலைகளிலிருந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கலாம் என்றால்? வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விடயத்தில் ஏன் அந்த ஒற்றுமையை காட்ட முடியாமல் இருக்கின்றது.

கடந்த அரசாங்கத்தில் 19 பேர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் நீதி அமைச்சர்களாகவும் இருந்துள்ளார்கள். இன்றைய தேசிய அரசாங்கத்தில் 21 பேர்கள் மக்களால் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 10 பேர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், இராஜாங்க அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர். இவர்கள் அத்தனை பேர்களும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விடயமாக அரசாங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தை  பெற்றுக் கொள்ளப்பட்ட உறுதி மொழிகள் தான் என்ன? ஆனால் முஸ்லிம் தலைவர்கள் இது காலவரையில் யுத்த காலத்தின் போது பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் எதுவிதமான கருத்தும் தெரிவிக்காது மௌனம் சாதித்து வருகின்றனர். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து சர்வதேசத்தின் பார்வைக்குகூட கொண்டு போக முடியாமல் போனது நமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் கையாலாகாத தனத்தை எடுத்துக் காட்டுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதன் காரணமாக உலக நாட்டுத் தலைவர்களுடன் எமது மக்களின் பிரச்சினைகளை கூட பேச முடியும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி உரிமையோடு பேசுவதைப் போன்று முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசுவதற்கு உரிமை உங்களுக்குண்டு. கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக  முஸ்லிம் அமைச்சர்கள் வாய்மூடி மௌனியாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்திற்காக உரத்த குரல் கொடுத்து வந்துள்ளார்கள். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட போது புலிகளின் ஆட்சி அதிகாரம் மேலோங்கியிருந்ததனால் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால் இன்று நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் என்ற மகுடத்தை தாங்கியிருக்கும் நீங்கள் உடுத்த உடையுடன் கண்ணீர் மல்க வெளியேறி அகதி முகாம்களில் இன்னும் வாழ்ந்து வரும் சகோதர முஸ்லிம் மக்களை வாஞ்சையோடு வாருங்கள் என்று அழைக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது' என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X