2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

150 விவசாயிகளின் படுகொலை தொடர்பில் ஐ.நா விசாரணை வேண்டும்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகராசா சரவணன்

அம்பாறை, உடும்பன்குளத்தில், கடந்த 1986ஆம் ஆண்டில்  150 அப்பாவி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (பெப்ரவர் 19ஆம் திகதி) 30 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் அவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இப்படுகொலைகள் உட்பட இம்மாவட்டத்தில் கடந்த யுத்த காலத்தில் ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டுசென்று, விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனான முதலாம் விஜயபாகுவின் படையெடுப்புக்குள் அகப்பட்டு அழிந்த பிரதேசம் தான் தங்கவேலாயுதபுரம் - உடும்பன்குளம். அன்று தொடக்கம் 2007 வரையும், காலம் காலமாக தொடர்ந்து அழிக்கப்பட்ட கிராமமாக இது விளங்குகின்றது. அவ்வாறே, தமிழ் மக்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்து வந்தார்களோ, அவர்களின் இடங்களை கைப்பற்றுவதில் ஆட்சியாளர்களால் அட்டவணைபோட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்புக்களைப் பறைசாற்றி நிற்கின்றது.

கடந்த 1986 பெப்ரவரி 19ஆம் திகதியன்று, உடும்பன்குளப் பகுதி வயல்பிரதேசத்தில் 1,750 ஏக்கர் நெல்வயல் அறுவடைக்கு தயாராக இருந்தது. இதற்கு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பல விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இரவு 10 மணியளவில், கவசவாகனங்களாப் அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 150 அப்பாவி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பில் இருந்து உயர் தப்பிய பெண் ஒருவர் இச் செய்தியை வெளி உலகுக்கு வெளிப்படுத்தினார். 

இவ்வாறு, கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை, மத்திய முகாம் 4ஆம் கொலனி, சவளைக்கடை, நாவிதன்வெளி, திராய்க்கேணி, அளிகம்பை போன்ற பல பகுதிகளில் உள்ள ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் வைத்து, ஆயிக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். 

இப்படுகொலைகள் தொடர்பாக அக்காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள், அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்துவிட்டு பயங்கரவாதி எனவும் கஞ்சாச்செடி வளர்த்தவர்கள் எனவும் முத்திரை குத்தினர்.

எனவே, தற்போது நிலவுகின்ற நல்லாட்சியில், இப்படுகொலைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுடன் விசாரணைகளும் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதுடன் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்ககுவதனூடாக படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடையும்' என கலையரசன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X