2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வாக்களித்த மக்களை மறந்து தமது சொந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டிருக்கின்றனர்: ஹிருணிகா

Administrator   / 2015 பெப்ரவரி 08 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காகவே எங்களை வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம், மாகாண சபைகளுக்கு அனுப்புகின்றீர்கள். ஆனால், உங்கள் மூலம் அரசியல் அதிகாரத்தினை பெற்றவர்கள் உங்களையும் உங்கள் பிரச்சினைகளையும் மறந்துவிட்டு, தங்களின் சொந்தப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காகவே செயற்படுகின்றனர் என மேல் மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின்  பிரத்தியோக செயலாளருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.


பொத்துவில் பிரதான வீதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) கலந்துகொண்டு  உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,


எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  சிறுபான்மை மக்களின் நலன்களில் மிகவும் அக்கரை கொண்ட ஒரு தலைவர். வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து தனது நன்றிகளை தெரிவிக்க வேண்டும் என்ற ஆசை அவரிடத்திலிருந்த போதும், துரதிஷ்டமாக அவரால் எல்லா பிரதேசங்களுக்கும் நேரடியாக வந்து தனது நன்றியினை தெரிவித்து கொள்ள முடியாதுள்ளது. அப்படியான பிரதேசங்களுக்கு அவரின் பிரதிநிதியான என்னை அனுப்பியுள்ளார். அந்த வகையில் வாக்களித்த மக்களாகிய உங்களுக்கு ஜனாதிபதி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.


நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் தங்களின் மதத்தினை தங்கு தடையின்றி சுதந்திரமாக பின்பற்றுவதற்கான களத்தினை இப்புதிய அரசாங்கத்தின் மூலம் நாம் உருவாக்கியுள்ளோம். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தான் எமது வெற்றிக்கு வித்திட்டன என்பதை மிகத்தெளிவாக ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கூறியுள்ளேன்.


இந்த பொத்துவில் பிரதேசத்தில் கடற்தொழில், விவசாயம் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளை களைவதற்கான நடவடிக்கைகளை கொழும்புக்கு சென்றவுடன் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா, இன்னால் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின்; கவனத்துக்கு கொண்டுவந்து,  100 நாள் வேலைத்திட்டட்தில் உள்ளடக்கி உடனடி தீர்வினை பெற்றுத்தருவதுக்கு நடவடிக்கை எடுப்பேன்.


நான் கூறும் இந்த வாக்குறுதியினை ஏனைய அரசியல் தலைவர்களின் பொய் வாக்குறுதி போல் கருத வேண்டாம். நாம் பிரதேச வாதம், மதவாதம் பேசுபவர்கள் அல்ல. எனது தந்தை பிரேமசந்திர சிறுபான்மை மக்களின் நலன்களில் மிகுந்த அக்கரை கொண்டவர். அவர்களின் பிரச்சினைகளை நன்கறிந்தவர் என்ற வகையில் உங்களின் பிரச்சினைகளை நானும் நன்கறிந்தவள்.


எனது கூற்றினை உறுதிப்படுத்த நீங்கள் விரும்பினால் கொழும்பில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் கேட்டுப்பாருங்கள். பொய் வாக்குறுதிகளை வழங்கிவிட்டுச் செல்வதுக்கு இங்கு நான் வருகைதரவில்லை. உங்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து தீர்பதற்கே வருகை தந்துள்ளேன்.


இந்நிகழ்வின் தலைவர் சுபையிர் அவர்களை எங்களது பொத்துவில் தொகுதிக்கான பிரதிநிதியாக நியமித்துள்ளோம். நீங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை அவரிடத்தில் கூறுவதன் மூலம் எங்களூடாக அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.


இச்சந்திப்பு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் முன்னால் பொத்துவில் மக்கள் வங்கி கிளையின் முகாமையாளருமான எஸ்.எம்.சுபையிர் தலைமையில் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X