2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சொந்த காணிகளுக்கு செல்லவிடாது தமிழர்களை தடுக்கின்றனர்: த.தே.கூ

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் 30 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் தமது சொந்த காணிகளுக்குச் சென்று மேட்டுநிலப் பயிர்செய்கை செய்வதற்காக காணிகளை துப்பரவு செய்வதை இராணுவத்தினரும் பொலிஸாரும் வனப்பரிபாலன சபையினரும் தடுத்துவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் எம்.துரைரெத்தினம் தெரிவித்தார்.

யுத்தம் முடிந்த பின்னரும் பொத்துவில் பிரதேசத்திலுள்ள தமிழ் மக்களுக்கு வாழ்வாதாரமான விவசாயத்தை மேற்கொள்ளுவதற்காக அவர்களது சொந்த காணிகளுக்கு செல்வதை இராணுவத்தினரும் பொலிஸாரும் வனப்பரிபாலன சபையினரும் தடுத்துவருவதாக குற்றஞ்சாட்டி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சங்கமம்கண்டி தொடக்கம் பொத்துவில் நகர் வட்டிவெளிவரையுமுள்ள கோமாரி, ஊறணி, ரொட்டை, களியாப்பத்தை, தாமரைக்குளம், மணற்சேனை மற்றும் இன்பெஸ்டர்ஏற்றம் ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மேட்டுநிலப் பயிர்செய்கையை தமது வாழ்வாதாரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

இவர்களுக்குச் சொந்தமான இப்பிரதேசங்களில் பயிர்செய்கை செய்வதற்கு யுத்த காலத்தில் படையினர் தடுத்துள்ளனர். இதனால் இந்நிலப்பகுதிகள் பற்றைக் காடாகியுள்ளன. இந்நிலையில் சுமார் 30 வருடங்களின் பின்னர் தற்போதுள்ள சமாதான சூழ்நிலையில் மீண்டும் சொந்த நிலங்களுக்குச் சென்று மேட்டுநிலப் பயிர்செய்கையை மேற்கொள்வதற்கு நிலங்களை துப்பரவு செய்யச் சென்றால் மீண்டும் இராணுவத்தினரும் பொலிஸாரும் வனப்பரிபாலன சபையினரும் தமிழ் மக்களைத் தடுத்துவருகின்றனர்.

அதேவேளை பொத்துவில் பிரதேசத்திலுள்ள சிங்களப் பகுதிகளான பாணமை மற்றும் லவ்கலை பிரதேசங்களில் காடுகளை துப்பரவு செய்து பயிர்செய்கை செய்ய ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர்.

சுனாமி அனர்த்தத்தின் போது கோமாரி பிரதேசம் முற்றுமுழுதாக அழிந்ததுடன் அவர்களின் ஆவணங்கள் யாவும் இல்லாமல் போயுள்ளன. சுனாமியின் பின்னர் பொத்துவில் பிரதேச செயலாளர்களாக முஸ்லிம் பிரதேச செயலாளர்கள் நால்வர் சேவையாற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ் மக்களை புறக்கணித்து அவர்களுக்கு ஆவணங்கள் வழங்காது 'இன்று போய் நாளை வா' எனக் கூறி அலைக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.

பொத்துவில் பிரதேச சபையில் பெரிய ஓதுக்கீடுகள் வரும்போது அது ஆளும் கட்சியில் உள்ளவர்களுக்கு மாத்திரம் வழங்கப்படுவதோடு 09 உறுப்பினர்களில் ஒரே ஒரு தமிழ் உறுப்பினரான என்னைப் புறக்கணித்துவிட்டு ஏனைய 08 முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் மோட்டார்சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இப்பிரதேசத்திலுள்ள தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, இவ்வாறான செயற்பாடானது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மனவேதனையை ஏற்படுத்திவருகின்றது என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X