2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

லலித் கொத்தலாவலவுக்கு பிணை

Kanagaraj   / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ. ஸிறாஜ் 

வரையறுக்கப்பட்ட சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரான லலித் கொத்தலாவல ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வரையறுக்கப்பட்ட சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனத்தின் அக்கரைப்பற்று கிளையில் பண வைப்புச் செய்தவர்களின் பணத்தை அந்நிறுவனம் மோசடி செய்துவிட்டது என்றும் அந்நிறுவனத்தில் வைப்பிலிடப்பட்டுள்ள தங்களது பணத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரியுமே ஐந்து பேர் இணைந்து இந்த வழக்கை கடந்த 2011ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழங்கில் - லலித் கொத்தலாவல உட்பட நான்கு பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் திறந்த நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. 

இதன்போது, லலித் கொத்தலாவல தனது சட்டத்தரணிகள் சகிதம் நீதிமன்றத்தில் முதன்முதலாக ஆஜரானார். ஏனைய மூன்று பிரதிவாதிகளும் ஆஜராகவில்லை. இந்த வழக்கின் மனுதாரர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் ஆஜரானார். 

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர், நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வழக்கின் பிரதிவாதியான லலித் கொத்தலாவலவிடம், 'சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்களில் அதிகமானவர்கள் ஏழை விவசாயிகள். அவர்களுக்கு நீங்க என்ன கூற விரும்புகிறீர்கள்' என நீதிபதி வினவினார். 

வரையறுக்கப்பட்ட சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனத்தில் பண வைப்புச் செய்தவர்களுடைய முழுப் பணத்தினையும் மீள வழங்குவேன் என, அந்த நிறுவனத்தின் பணிப்பாளரான லலித் கொத்தலாவல,  நீதிமன்றில் உறுதியளித்தார்.  

'கடந்த காலங்களில் எனது கைகள் கட்டப்பட்டிருந்தன. இப்போது, அவ்வாறான நிலையிலிருந்து விடுபட்டுள்ளேன். சிலிங்கோ புரொஃபிட் ஷெயாரிங் இன்வெஸ்ற்மென்ட் கோப்பரேஷன் நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்கள் அனைவரின் பணத்தையும் நான் மீளளிப்பேன். அதற்குரிய நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகிறேன்' என்றார். 

இந்த வழக்கு மே மாதம் 06 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X