2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

அம்பாறையில் 58,500 ஹெக்டேயரில் சிறுபோகம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 16 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாவட்டத்தில் 58 ஆயிரத்து 500 ஹெக்டேயர நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுமென்று தாம் எதிர்பார்ப்பதாக அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீல் தெரிவித்தார்.

இதனடிப்படையில் பாரிய நீர்ப்பாசனங்களின் கீழ் 54 ஆயிரத்து 100 ஹெக்டேயர் காணிகளிலும் சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் 4 ஆயிரத்து 400 ஹெக்டேயர் காணிகளிலுமே சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

சேனநாயக்க சமுத்திரத்தில் தற்போது போதியளவு நீர் உள்ளமையால், எதிர்பார்க்கும் அளவு காணிகளில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்வதில் எந்தவித சிக்கலும் இல்லை. சேனாநாயக்க சமுத்திரத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருப்பதால் சிறுபோக நெற்செய்கைக்கான வேலைகளில் விவசாயிகள் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடவுள்ள விவசாயிகள் விதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான காலம் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் தவிர்ந்த பகுதிகளிலுள்ள விவசாயிகள், ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் தமது விதைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் விதைப்பு நடவடிக்கைகளுக்கான காலம் பற்றி அறிவிக்கும்  ஆரம்பக்கூட்டங்கள் அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறைப் பிரதேச செயலகங்களில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், அம்பாறை மாவட்ட விவசாயிகள் சிறுபோக நெற்செய்கைக்காக தங்களது நெற்காணிகளை பண்படுத்தி விதைப்புக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதோடு தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் பண்படுத்தும் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X