2025 ஜூலை 05, சனிக்கிழமை

கல்முனை மாநகர சபையில் பெரும் சர்ச்சை

Princiya Dixci   / 2015 மே 28 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை மாநகர சபை, கல்முனை வாழ் தமிழ் சமூகத்தை முற்றாக புறக்கணித்து வருவதாக குற்றஞ்சாட்டி அந்த சபையின் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வீ.கமலதாசன், பொது நிர்வாக, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பிய கடிதத்தினால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு, நேற்று புதன்கிழமை (27) இடம்பெற்றபோதே இக்கடித விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சபைக்கு தலைமை வகித்த மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், ஆங்கில மொழியில் அனுப்பப்பட்டிருந்த குறித்த கடிதத்தை சபையில் வாசித்துக் காட்டியதுடன் அது குறித்த தமது மறுப்பை புள்ளி விவரங்களுடன் தெளிவுபடுத்தினார்.

கல்முனை தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தியில் முற்றாக  புறக்கணிக்கப்படுவதாகவும் தொழில் வாய்ப்பு விடயத்தில் சுகாதாரத் தொழிலாளர் நியமனத்தை தவிர வேறு எந்த தொழில் வாய்ப்பும் தமிழருக்கு வழங்கப்படவில்லை எனவும் உறுப்பினர் கமலதாசன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தான் முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்த முதல்வர் அதற்கான ஆதாரங்களை சபையில் சமர்ப்பித்தார்.

உள்ளூராட்சி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரினால் என்னிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அதற்கான அறிக்கையை இப்புள்ளி விவரங்களுடன் தயார் செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதனை அமைச்சர் மற்றும் ஆளுநருக்கு அனுப்புவதற்கு முன்னர் சபைக்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது.

தேசிய ரீதியில் தமிழ் - முஸ்லிம் நல்லுறவுக்காகவும் வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைத் தீர்வுக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுகின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நான் முன்னிலை வகித்து வருகின்ற நிலையில் தமிழ் உறுப்பினரின் இக்குற்றச்சாட்டு தொடர்பில் என்னை தனிப்பட்ட வகையில் அறிந்து வைத்துள்ள ஆளுநர் கூட பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இக்கடிதம், என்னை மாத்திரம் குற்றஞ்சாட்டவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஆளப்படுகின்ற மாநகர சபை, தமிழர்களை ஓரங்கட்டுவதாக குறிப்பிடுவதன் மூலம் இந்த சபையையும் எமது கட்சியையும் முஸ்லிம் சமூகத்தையும் ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது மிகவும் பாரதூரமான அபாண்டமான குற்றச்சாட்டாகும். கல்முனைக்கு வெளியே உள்ள தமிழ் மக்கள் இதனை உண்மை என நம்ப முடியும். தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தக் கூடியதான பொய்ப் பிரசாரத்தை உறுப்பினர் கமலதாசன் மேற்கொண்டிருப்பதன் பின்னணி என்ன என்பதை நாம் அறிய முற்படுகின்றோம்.

நான் கல்முனைக்குடியை சேந்தவனாக இருந்தும் அங்கு ஒரு சதம் கூட செலவு செய்யவில்லை. முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவான கல்முனை நகரில் ஐக்கிய சதுக்கம், விளையாட்டு மைதானம் மற்றும் பொதுச் சந்தை போன்வற்றுக்கே முன்னுரிமை கொடுத்து நிதியோதுக்கீடுகளை மேற்கொண்டு வருகின்றேன்.

அனைத்து உறுப்பினர்களுக்கும் சரி சமனாக நிதி ஒதுக்கீடுகள் செய்வதுடன் கமலதாசன் போன்ற தமிழ் உறுப்பினர்களுக்கு மேலதிகமாகவும் கொடுத்துள்ளேன். மிகக் கூடுதலான சுகாதாரத் தொழிலாளர் நியமனத்துடன் 11 சாரதி நியமனத்தில் 9 தமிழர்களுக்கும் 2 முஸ்லிம்களுக்கும் நியமனம் வழங்கியுள்ளேன். இப்படி பல தொழில் நியமன்களில் இன விகிதாசாரத்தை விட கூடுதலான நியமனங்களும் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகளையும் தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றேன்.

ஆனால், இதற்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக அபாண்டமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதையிட்டு நான் பெரும் கவலையும் வேதனையும் அடைகின்றேன்' என்று முதல்வர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த உறுப்பினர் கமலதாசன்; இவ்வாறு குற்றஞ்சாட்டி தான் அமைச்சருக்கு கடிதம் அனுப்பியமை உண்மை எனவும் அது இன்று இந்த சபையில் விவாதத்துக்கு வரும் என தான் அறிந்திருக்கவில்லை எனவும் அதனால் நான் பதிலளிப்பதற்கு தயாராக வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஜெயக்குமார் கருத்து தெரிவிக்கையில்

இப்படி ஒரு கடிதம் அனுப்பப்பட்டமை எமக்குத் தெரியாது. அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நான் நூறு வீதம் ஏற்றுக் கொள்ளவுமில்லை, நூறு வீதம் நிராகரிக்கவும் இல்லை. அது குறித்து பதிலளிப்பதற்கு உறுப்பினர் கமலதாசனுக்கு கால அவகாசம் வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார்.  

உறுப்பினர் ஜெயக்குமாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் இவ்விடயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு உறுப்பினர் கமலதாசனுக்கு அடுத்த அமர்வு வரை கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்து சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .