2025 மே 15, வியாழக்கிழமை

2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்; உபதவிசாளரின் எதிர்ப்பிலும் வெற்றி

வி.சுகிர்தகுமார்   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உப தவிசாளரின் எதிரான வாக்களிப்புக்கு மத்தியிலும் வெற்றி பெற்றுள்ளது.

சபையின் தவிசாளர் க.பேரின்பராசா தலைமையில், பிரதேச சபையின் நிதி உதவியாளர் மா.சத்தியநாதன் முன்னிலையில், பிரதேச சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்ற பட்ஜெட்டுக்கான கூட்டத்தொடரின் போதே, இவ்வாறு வெற்றிபெற்றது.

16 உறுப்பினர்களைக் கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பட்ஜெட்டுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் எதிராக உபதவிசாளர், ஆளும்கட்சி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வாக்களித்ததுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பின்போது, சபைக்கு சமுகமளிக்கவில்லை.

ஆலையடிவேம்பு பிரதேச சபையில் தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட்ட ஈரோஸ் ஜனநாயக முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்ததான கூட்டாட்சி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் உப தவிசாளர் விக்டர் ஜெகன் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்ததுடன், ஆளும்தரப்பான ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மற்றுமோர் உறுப்பினரும் எதிராக வாக்களித்தார்.

குறித்த, பட்ஜெட்டில் தவிசாளருக்கு அதிகளவான நிதியும் உறுப்பினர்களுக்கு குறைவான நிதியும் ஒதுக்கப்பட்டதனாலேயே தான் எதிராக வாக்களித்ததாக உப தவிசாளர் தெரிவித்தார்.

ஆயினும், சமர்ப்பிக்கப்பட்ட பிரதேச சபையின் பட்ஜெட்டின் மூலம் கழிவு முகாமைத்துவத்துக்காக 02 மில்லியனும், உள்ளக வடிகான் திருத்தத்துக்காக 02 மில்லியனும், சிறுவர் பூங்கா அமைப்புக்காக 01 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், பிரதேச ரீதியான அபிவிருத்தி அடங்கலாக 32.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மதிய நேரத்தின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .