2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இஸ்ரேல் நலன்புரி நிலைய விவகாரம்: தனிநபர் பிரேரணைக்கு வாக்கெடுப்பு

Gavitha   / 2015 நவம்பர் 25 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கையில் இஸ்ரேலிய நலன்புரி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிழக்கு மாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கு, அடுத்து வரும் விசேட அமர்வின் போது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

'இஸ்ரேல் எனும் நாடானது, இன்றைய நவீன யுகத்தில் மனிதாபிமானம், சமஉரிமை, நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உரிமைகள், கடப்பாடுகள், விழுமியங்களை மீறி இன்றைய நவீன யுகத்தில் கபளீகரம் செய்து, இன்னுமொரு தேசத்தை அடிமைப்படுத்தி இன்றுவரை கொடுங்கோல் ஆட்சி செய்துவரும் நாடாகும்.

பலஸ்தீன மக்களது உரிமைகளை மீறி, அந்த மக்களுடைய நாட்டுரிமையை மறுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை புறக்கணித்து, உலகிலேயே திறந்த சிறைச்சாலையென வர்ணிக்கப்படுகின்ற காஸா பிரதேசத்தில், பலஸ்தீன மக்களைச் சிறைப்படுத்தி, அம்மக்களின் சுதந்திர நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, மனித பேரவலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் உலக சட்டவிதிகளுக்கு முரணாக உருவானதொரு நாடாகும்' என்று அவர் கூறினர்.

'தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, எந்தவொரு அநீதியையும் மற்றைய நாடுகளில் அரங்கேற்றுவதற்குத் தயங்காத மனப்பாங்கைக் கொண்ட ஒரு குழுமத்தினால் உருவாக்கப்பட்ட நாடே இந்த இஸ்ரேல் ஆகும். இவ்வாறான ஒரு நாட்டின் நலன் பேணும் நிலையமொன்றை பல்லினச் சமூகம் ஒற்றுமையுடன் வாழும் இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு அனுமதிப்பதானது, நிலவுக்கின்ற இன ஒற்றுமையை, சமூக ஒருமைப்பாட்டை சீர்குலைத்து, தமது நலன்களை மேம்படுத்திச் செயற்படுவதற்கு அந்நாட்டுக்கு வழங்கப்படுகின்ற ஒரு வாய்பாக அமைந்து விடும்' என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால், இலங்கையில் இஸ்ரேலிய நலன்புரி நிலையத்தை ஸ்தாபிப்பதை, கிழக்கு மாகாண சபையினூடாக எதிர்க்கும் பொருட்டு, இத்தனிநபர் பிரேரணையை செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற மாகாண சபையின் அமர்வின்போது,  முன்வைத்துள்ளேன் என்று தெரிவித்த அவர், இது தொடர்பில் எதிர்வரும் விசேட சபை அமர்வின் போது வாக்கெடுப்புக்கு எடுக்கப்படவுள்ளதாகவும்  தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X