Nirshan Ramanujam / 2017 நவம்பர் 22 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, ஒலுவில் கடற்பரப்பில் கடலரிப்பையும் தாதுப்பொருள் அகழ்வையும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், நாடாளுமன்றில் இன்று (22) வேண்டுகோள் விடுத்தார்.
2018ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் கமத்தொழில், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி, நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவம், ஆரம்ப கைத்தொழில் ஆகிய அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரை நிகழ்ந்துகையில் தெரிவித்ததாவது,
“ஒலுவில் முதல் பொத்துவில் வரையான கடற்கரைப் பகுதியில் பெரும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. 100 முதல் 150 மீற்றர் வரையான பகுதி கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பாதிப்பை மக்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
“அவர்களுடைய நிலம், தென்னந்தோப்பு இழந்து பொருளாதாரத்தில் வலுவிழந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். ஒலுவில், அக்கறைப்பற்று. திருக்கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கடல்வளத்தை நம்பியிருப்பதால் பெரும் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறார்கள். இது குறித்து நாம் பல தடவைகள், இந்தச் சபையில் தெளிவுபடுத்தியிருக்கிறோம். ஆனால், யாரும் செவிமடுத்ததாக எமக்குத் தெரியவில்லை.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியாக்குவதற்கு முன்னின்ற செயற்பட்ட அந்த மக்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.
“அதனைத் தவிர அந்த கடற்கரைப் பகுதிகளில் தாதுப் பொருட்களை அகழும் பணிகள் இடம்பெறுவதாக நான் அறிகிறேன். இவ்வாறு அகழும் தாதுப்பொருட்களில் இல்மனைட் உட்பட மேலும் தாதுப்பொருட்களும் அடங்கும். “தாதுப்பொருட்களில் இருந்து கிடைக்கும் பொருட்களில் சில இரசாயான அணுகுண்டுத் தயாரிப்புக்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுவதை நான் சபையின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
“இது ஒரு பாரிய பிரச்சினையாகும். இதற்கு அவுஸ்திரேலிய நிறுவனமொன்று முன்னின்று செயற்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது” என்றார்.
அவரது உரையின்போது குறுக்கிட்ட ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, “அந்தத் துறை, ஜனாதிபதியின் கீழ் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். நீங்கள் குறிப்பிடுவது போல, சூழலுக்கு மாசான திட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின் அது குறித்து ஆராய்ந்து அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025