2025 மே 21, புதன்கிழமை

கோட்டக் கல்வி அதிகாரி நியமனங்களில் முறைகேடுகள்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 17 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தமிழ்ப் பிரிவு, சம்மாந்துறை, ஆலையடிவேம்பு ஆகிய கோட்டக் கல்வி அதிகாரி நியமனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவின் கவனத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டுவந்துள்ளது.

இது தொடர்பில் ஆளுநருக்கு மேற்படி சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், 'அம்பாறை மாவட்டத்தில் வெற்றிடமாகக் காணப்பட்ட கோட்டக் கல்வி அதிகாரிகள் பதவிகளுக்காக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சால் விண்ணப்பம் கோரப்பட்டு, கடந்த வாரம் நியமனங்கள் வழங்கப்பட்டன. அவற்றுள் கல்முனை தமிழ்ப் பிரிவு, சம்மாந்துறை, ஆலையடிவேம்பு ஆகிய கோட்டக் கல்வி அதிகாரி நியமனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'கல்முனை தமிழ்ப் பிரிவுக்கான கோட்டக் கல்வி அதிகாரி நியமனத்தின்போது, கல்முனை வலயத்தைச் சேர்ந்த பல அதிபர்கள் புறக்கணிக்கப்பட்டு, பட்டிருப்பு வலயத்தை சேர்ந்த ஒரு பெண் அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு கல்வி வலயத்தில் பதவி வெற்றிடம் நிலவினால், அவ்வலயத்துக்குட்பட்டோரைக் கொண்டே அது நிரப்பப்படுவது நீண்டகாலமாக இருந்துவரும் நடைமுறையாகும். ஆனால், இந்த நியமனத்தின்போது அது மீறப்பட்டுள்ளது.

சம்மாந்துறை கோட்டக் கல்வி அதிகாரி நியமனத்தின்போது, இலங்கை அதிபர் சேவையைச் சாராத ஆசிரியர் சேவைக்குட்பட்ட ஒருவர் அரசியல்வாதி ஒருவரின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார். இது விடயத்தில் அடிப்படை விதிமுறை முற்றாக மீறப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பு கோட்டக் கல்வி அதிகாரி நியமனத்துக்காக நேர்முகப் பரீட்சையை நடத்திவிட்டு, தகுதியான அதிபர் ஒருவருக்கு நியமனம் வழங்காமல், தேசிய பாடசாலை அதிபர் ஒருவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகையால், இவற்றைக் கவனத்திற்கொண்டு முறைகேடுகளாக வழங்கப்பட்டுள்ள நியமனங்களை இரத்துச் செய்து, உரிய விதிமுறைகளைப் பேணி பொருத்தமானவர்களுக்கு நியமனங்களை வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .