2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கொலைச் சம்பவம்; பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்யவில்லையெனக் கூறி முறைப்பாடு

Suganthini Ratnam   / 2016 மே 17 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, கோமாரி முருங்கந்தனைப் பிரதேசத்தில் 19 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் எடுக்கவில்லை என்று கூறி பொலிஸாருக்கு எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில்; உயிரிழந்தவரின் தாய் திங்கட்கிழமை (16) முறைப்பாடு செய்துள்ளார்.

இம்முறைப்பாடு தொடர்பில் கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி மாலை, கோமாரி முருங்கந்தனை வயலுக்கு வேளாண்மைக் காவலுக்குச் சென்ற அதே பகுதியைச்; சேர்ந்த முத்துக்குமார் தனுஜன் (வயது 19) மறுநாள் 25ஆம் திகதி காலை ஏழு மணியாகியும்; வீடு திரும்பவில்லை.  இதனை அடுத்து, இவரது தந்தை குறித்த வயலுக்குச் சென்று தேடியபோதும், இவரைக் காணவில்லை. இருப்பினும், குறித்த வயலில் உயிரிழந்தவரின் சகோதரனும் நண்பர்களும் தொடர்ந்து தேடியபோதும், அவரை அங்கு காணவில்லை. இது தொடர்பில் பொத்துவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நிலையில்,  மோப்பநாய்களுடன் பொலிஸார் அன்றையதினம் இரவு தேடுதல் நடத்தியபோதும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து 26ஆம் திகதியும் குறித்த வயலில் தேடியபோது, கண்கள் தோண்டப்பட்டும் முகம், கழுத்து போன்றவற்றில் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டார். சடலம் மீட்கப்பட்டு  பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இவ்வயலில் காவலிலிருந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பொலிஸாரால்; கைதுசெய்யப்பட்டு, பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், பிரதான சந்தேக நபரை இதுவரையில் பொலிஸார் கைதுசெய்யாமல் உள்ளனர். இச்சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள இடம்; தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தபோதும், கடந்த 5 மாதங்களாகியும்  இவரைக் கைதுசெய்யாமை எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பொலிஸாரின் இவ்வாறான செயற்பாட்டால் எனது மகனைக் கொலை செய்தவர்கள் தப்பிக்ககூடிய வாய்ப்பு உள்ளது எனக் கூறி பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனை கொலை செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அத்தாய் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X