2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘கட்டாக்காலிகளைக் கட்டுப்படுத்த செயலணி அமைக்கப்படும்’

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 மே 09 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது இடங்களிலும் பிரதான வீதிகளிலும் நடமாடும் கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, விசேட செயலணியொன்று அமைக்கப்படுமென, கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், இன்று (09) தெரிவித்தார்.

 

கல்முனை நகரில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை, கடந்த சில தினங்களாக கல்முனை மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், "கல்முனை மாநகரப் பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டங்கள், பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக அமைந்துள்ளன. இதனால் அன்றாடம் விபத்துகளும் நிகழ்கின்றன. வர்த்தகர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

“இவற்றைக் கருத்தில் கொண்டே கட்டாக்காலி மாடு, ஆடுகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அவற்றைக் கைப்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

அவ்வாறு கைப்பற்றப்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டப்பணம் அறவிடப்படும் எனவும், அதன் பின்னர் விடுவிக்கப்படும் கால்நடைகளைத் தமது சொந்த இடங்களில் வைத்து பராமரிக்கத் தவறும் பட்சத்தில், அவை மீண்டும் கைப்பற்றப்படுமானால், நீதிமன்ற அனுமதியுடன் அவை அரசுடமையாக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

“முன்னரும் காலத்துக்கு காலம் இடையிடையே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், கால்நடைகளின் உரிமையாளர்கள் இவ்விடயத்தில் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களில், இவ்விடயத்தில் எவ்வித நெகிழ்வுப்போக்கும் காட்டப்பட மாட்டாது என்பதுடன், மாநகர சபை ஊழியர்களைக் கொண்டு இதற்கென தனியான செயலணி நிறுவப்பட்டு, தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், மாநகர மேயர் றக்கீப் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X