2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கல்முனை மாநகரசபைக்கு சுமார் ரூ.8 கோடி நிலுவை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கல்முனை மாநகரசபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்படவேண்டிய சோலை வரியானது சுமார் 08 கோடி ரூபாய் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக அம்மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

இந்நிலையில், சோலை வரி செலுத்தாத பொதுமக்களிடமிருந்து அவ்வரியை அறவிடும் முகமாக மாநகரசபையினால் இன்று செவ்வாய்க்கிழமை முதல்  எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.    எனவே, செலுத்தப்படவேண்டிய சோலைவரியை பொதுமக்கள் உடனடியாகச் செலுத்தி, அதற்கான பற்றுச்சீட்டுடன் ஸ்ரிக்கரையும் பெற்று தங்களின் வீடுகளில் ஒட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ள வீடுகளிலிருந்து மாத்திரமே குப்பைகள் அகற்றும் நிலை ஏற்படுமெனவும் அவர் கூறினார்.

2002ஆம் ஆண்டு முதல் இன்றுவரை மாநகரசபைக்கு பொதுமக்களில் பெரும்பாலானோரினால் செலுத்தப்பட வேண்டிய சோலை வரி செலுத்தப்படாமலுள்ளது. இதனால், அவர்களுக்கு மாநகரசபை ஆற்றவேண்டிய சேவைகளை வினைத்திறனான முறையில் மேற்கொள்வதில் பாரிய சிரமம் காணப்படுகின்றது.

குறிப்பாக பொதுமக்களின் வதிவிடங்களிலிருந்து குப்பைகளை அகற்றுதல், வீதி விளக்குகள் மற்றும் வடிகான்களை பராமரித்தல் உள்ளிட்ட அன்றாடக் கருமங்களுக்கும் குப்பைகளை அகற்றுவதற்குரிய வாகனங்களை புதிதாக கொள்வனவு செய்வதற்கு அல்லது இருக்கின்ற வாகனங்களை பழுதுபார்ப்பதற்கு போதிய நிதி இல்லாமல் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

மேலும், குப்பைகளை அகற்றுவதற்காக மாதாந்தம் சுமார்  40 இலட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. இக்கருமங்களைச் செய்வதற்குத் தேவையான நிதி பொதுமக்களினால் செலுத்தப்படுகின்ற சோலை வரியிலிருந்தே பெறப்படுவதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X