Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 24 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் மலசலகூடங்களில் பாரிய சுகாதாரக் குறைபாடுகள் இனங்காணப்பட்டுள்ளதாக அப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.அலாவுடீன் தெரிவித்தார்.
அம்பாறை, திருக்கோவில் வலயக்கல்வி பிரிவில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கான 'பாடசாலைகளில் சுகாதார மேம்பாடு' எனும் தொனிப்பொருளில் தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நாம் பாடசாலைகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் அநேகமான பாடசாலைகளில் உள்ள மலசலகூடங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் என்பன போதிய சுகாதாரம் அற்ற நிலையில் காணப்படுகின்றன.
பாடசாலைகளில் மாணவர்கள் நீர் அருந்துவது இன்று குறைவடைந்து வருகின்றது. இதற்கு காரணம் நீரை அருந்துகின்ற வேளை சிறுநீர் கழிக்க வேண்டும். அவ்வாறு சிறுநீர் கழிப்பதற்கு சுத்தமான மலசல கூடங்கள் பாடசாலைகளில் காணப்படுவதில்லை. இவ்வாறான சுத்தமற்ற மலசல கூடங்களை பாவிப்பதில் இருந்து மாணவர்கள் ஒதுங்குகின்றார்கள். இதன் காரணமாக பாடசாலைகளில் மாணவர்கள் சிறுநீர் கழிப்பது குறைவாகவுள்ளது.
இதனையடுத்து மாணவர்கள் மத்தியில் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கின்ற காரணிகளை உடனடியாக பாடசாலைகளில் இருந்து அகற்ற வேண்டும். அதற்கு பாடசாலை நிர்வாகம் ஒத்துழைப்புக்களை கொடுக்க வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டே இன்று நாம் சுகாதாரம் மற்றும் போஷாக்கு தொடர்பான விழிப்பூட்டும் கருத்தரங்கினை வலயக்கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு மேற்கொண்டு வருகின்றோம்.
உலகில் அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளுடன் போட்டியிடக்கூடிய வகையில் இலங்கையில் சுகாதாரம் ஒரு உயர்ந்த உன்னதமான இடத்தில் உள்ளது. இருந்த போதிலும் இலங்கையில் போஷாக்கு நிலையினை கருத்தில் கொள்ளும் போது அது குறைந்தளவிலேயே காணப்படுவதாக பல ஆய்வுகளின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்து இலங்கை மக்களின் போஷாக்கு மட்டத்தினை உயர்த்தி அவர்களின் வாழ்க்கை முறையில் ஒரு ஆரோக்கியமான சுகாதார போஷாக்கு மட்டத்தினை ஏற்படுத்தும் வகையில் பல வேலைத்திட்டங்களை எமது மாகாண மற்றும் மத்திய அரசு முன்னெடுத்து வருகின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .