Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 24 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பிய செனட்டர் மசூர் மௌலானா, தமிழரசுக் கட்சியின் கோட்பாடுகளில் முஸ்லிம் சுயாட்சி பற்றிய தீர்மானத்தையும் உள்ளடக்குவதற்கு காரணகர்த்தாக இருந்தார் என கல்முனை மாநகர பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று சனிக்கிழமை, மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோது, அந்த மாநகர சபையின் முன்னாள் முதல்வரான செனட்டர் மசூர் மௌலானாவின் மறைவுக்காக மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலியினால் அனுதாபப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இப்பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்,
செனட்டர் மசூர் மௌலானா, பாடசாலைப் பருவத்திலேயே அரசியலில் நுழைந்து தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் கற்றுத் தேர்ந்தவர். அதனால்தான் எனது அரசியல் தொட்டில் தமிழரசுக் கட்சி என்றும் தந்தை செல்வாவின் மடியிலேயே தான் அரசியல் பால் குடித்து வளர்ந்தவன் என்றும் அவர் அடிக்கடி கூறிக் கொள்வார்.
அவரிடம் விடுதலை உணர்வு சார்ந்த கொள்கை, கோட்பாடு இருந்தமையினாலேயே அவர் தமிழரசுக் கட்சியில் இணைந்து தமிழ் தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாத்வீகப் போராட்டங்களில் பங்கேற்றிருந்தார்.
தமிழ் அரசியல் தலைமைகளுடன் இணைந்து முஸ்லிம்களின் நலன்களுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துப் போராடினார். வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கும் ஒரு தேசியம் இருக்கிறது, அவர்களுக்கும் சுய நிர்ணய உரிமை வேண்டும். மட்டக்களப்புக்கு தெற்கே முஸ்லிம்களுக்கான சுயாட்சிப் பிராந்தியம் உருவாக்கப்பட வேண்டும் என்று மசூர் மௌலானா உரத்துக் குரல் எழுப்பியதுடன் அது தொடர்பில் 1959ஆம் ஆண்டு திருமலையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் அவர் கொண்டு வந்த பிரேரணை தமிழ் தலைமைகளினால் அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் வடக்கு, கிழக்கில் ஒரு தமிழரசு அமைவது போன்று முஸ்லிம் அரசும் உருவாக்கப்படும் என்ற தீர்மானம் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்படுவதற்கு அவரே கால்கோளாக இருந்தார் என்று வரலாறு சொல்கிறது. அந்தளவுக்கு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், அபிலாசைகள் தொடர்பில் அவர் அக்கறையுடன் செயற்பட்டிருந்தார்.
பொதுவாக இந்த நாட்டில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுகின்ற எந்தவொரு கூட்டத்திலும் மசூர் மௌலானாவின் பிரசன்னம் இல்லாமல் இருக்காது. அவர் எந்த இடத்திலும் எவர் முன்னிலையிலும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு அஞ்சியதில்லை. அவர் தனது சமூகத்துக்காக எப்போதும் மிகவும் தைரியமாக குரல் எழுப்பி வந்துள்ளார்.
1960ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பெரும் சக்திவாய்ந்த அமைச்சராகத் திகழ்ந்த கேட் முதலியார் எம்.எஸ்.காரியாபரை எதிர்த்து தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு, 112 வாக்குகள் குறைவினால் வெற்றி வாய்ப்பை இழந்தார். 1965ஆம் ஆண்டும் காரியப்பருடன் போட்டியிட்டு சுமார் நானூறு வாக்குகளினால் தோல்வியுற்றிருந்தார்.
ஆனாலும் 1967ஆம் ஆண்டு அப்போதைய நாடாளுமன்றத்தின் மேல் சபை (செனட்) உறுப்பினராக மசூர் மௌலானாவை நியமித்து தமிழரசுக் கட்சி அழகு பார்த்தது. எனினும் 1968ஆம் ஆண்டு எம்.எஸ்.காரியப்பர், இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் செனட்டர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அத்தேர்தலிலும் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளினால் தோல்வியுற்றிருந்தார்.
பிற்காலத்தில் பெரியநீலாவணைக் கிராமத்தில் முஸ்லிம் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அமிர்தலிங்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளினால் செனட்டர் மசூர் மௌலானா தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார் என்பது வரலாறாகும்.
1970ஆம் ஆண்டு தொடக்கம் 1977ஆம் ஆண்டு வரை சிறிமாவோ பண்டாரநாயக்க, அவசர காலச் சட்டத்தின் கீழ் நாட்டை ஆட்சி செய்தார். அக்காலப் பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கூட்டம் ஒன்றை நடத்த முடியவில்லை. ஆனால் 1976ஆம் ஆண்டு செனட்டர் மசூர் மௌலானா, மிகவும் துணிச்சலுடன் முஸ்லிம் லீக்கின் பெயரால் மருதமுனையில் பெரும் எழுச்சி மாநாடு ஒன்றை நடாத்தி, அதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை அழைத்து வந்து பேச வைத்தார். அதுவே 1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அடித்தளமிட்டது' என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
59 minute ago
1 hours ago