2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்ற பிரகடனம் இழுத்தடிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 19 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சிமன்றப் பிரகடனம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றமை கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தெரிவித்தது.

இது தொடர்பில் இம்மன்றத் தலைவர் எம்.ஐ.ஏ.ஜப்பாரும்   பொதுச் செயலாளர் கலீல் எஸ்.முஹம்மட்டும் கையொப்பமிட்டு  செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிமன்றம், தேர்தல் முடிந்த கையோடு நிறுவப்படுமென்று கடந்த பொதுத்தேர்தல் பிரசாரத்தின்போது, கல்முனை நகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அளிக்கப்பட்ட உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கமையவே மக்கள் முன்னிலையில் அவர் இந்த உத்தரவாதத்தை வழங்கியிருந்தார்.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக பொறுப்பேற்று பல தடவைகள், பல இடங்களிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் பிரஸ்தாபிக்கப்பட்டபோதிலும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முழுமை பெற்றதாகவோ தொடர்ந்தும் முன்னேடுக்கப்படுவதாகவோ தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை பிரஸ்தாபித்திருந்ததுடன், 2016 ஜனவரி மாதத்தில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சிமன்றம் ஸ்தாபிக்கப்படுமென்று தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஜனவரி மாதத்தில்; அரைவாசிப்பகுதி கடந்துவிட்டது. எதுவும் நடப்பதாகத்  தெரியவில்லை.

ஒரு சிலர் வட்டார எல்லை நிர்ணய சர்ச்சையை காரணம் காட்டுகின்றனர். ஆனால், சாய்ந்தமருது பிரதேசத்தைப் பொறுத்தளவில் வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. சாய்ந்தமருது தெளிவான எல்லைகளுடன் ஆறு வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதுடன், அதன் ஒட்டுமொத்த நாலாபுற எல்லைகளும் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்கென வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தற்போது பேசப்படுகின்ற வட்டாரமுறை என்பது தேர்தல் நடத்துவதற்கான முறையே அன்றி, ஓர் உள்ளூராட்சிமன்றத்தை உருவாக்குவதற்கு எந்த விதத்திலும்  தடையாக இருக்கப் போவதில்லை என்பதை சம்பந்தபட்ட தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X