2025 மே 21, புதன்கிழமை

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சிமன்றம்: ஐ.நா. சபைக்கு கொண்டுசென்று நிறைவேற்றும் விடயமல்ல

Suganthini Ratnam   / 2016 மார்ச் 16 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சிமன்றக் கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டுசென்று நிறைவேற்றும் விடயமல்ல. அரசியல் தலைமைகளால் வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்ந்தும் மாநாட்டுத் தீர்மானங்களாக இருக்காமல், அது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டுமென  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்றம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரி  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தொடர்ச்சியாக கடிதங்களை அனுப்புகின்றது. இது தொடர்பிலேயே நேற்று புதன்கிழமை அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'வாக்குறுதி ஒரு அமானிதமாகும். குறித்த காலத்தில் குறித்த நேரத்தில் அது நிறைவுக்கு கொண்டுவரப்படுதல் வேண்டும். மாறாக தொடர்ந்தும் அது மாநாட்டுத் தீர்மானங்களாக இருக்கக்கூடாதென்று வலியுறுத்திக் கூற  விரும்புகிறேன்' என்றார்.

'பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க மற்றும் எமது முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியின் பிண்ணனியில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சமூகம், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் போன்ற சிவில் அமைப்புகளின் அழுத்தங்கள் பிரதானமாக இருந்துள்ளன. என்னைக்கூட பல தடவைகள் அந்த அமைப்புச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.

இதனைத் தொடர்ந்தே கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையுடன் அக்கோரிக்கை நிறைவேற்றித் தரப்படுமென்று நாம் கூறியிருந்தோம். அவ்வாறே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  வாக்குறுதியை  மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். ஆனால், இதுவரைக்கும் அது நிறைவுக்கு கொண்டுவரப்படாமல் இருப்பது தொடர்பில் நான் கவலையடைகிறேன்' என்றார்.

'இந்த உள்ளூராட்சிமன்றக் கோரிக்கையானது அம்மக்களின் குறைந்தபட்சக் கோரிக்கை. இதனை நிறைவேற்றிக் கொடுக்க இதுவரை காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

எல்லை நிர்ணயம் என்பது எதிர்காலத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்துவதற்கான முறைமையிலுள்ள ஒரு பிரச்சினையாகும். அதற்கும் சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்றப் பிரகடனத்துக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. அதனைக் காரணம் காட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. எல்லை நிர்ணயம் முடிந்து அதன் பிற்பாடே அது வழங்க முடியுமென்றால் எமக்கு எதற்கு அரசியல் அதிகாரம்? எதற்கு அமைச்சரவை அமைச்சுப் பதவியெனக் கேட்க விரும்புகிறேன்.
இந்தக் கோரிக்கை ஐ.நா சபைக்கு கொண்டு சென்று நிறைவேற்றும் விடயமல்ல. உள்ளூராட்சி அமைச்சர் தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு செய்கின்ற சாதாரண விடயமாகும். பிரதமருடன் அல்லது ஜனாதிபதியுடன் கலந்துரையாடி ஓரிரு நாட்களுக்குள் அதனை இலகுவாகச் செய்ய முடியும். எம்மிடமுள்ள அரசியல் அதிகாரத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
இது விடயத்தில் அந்த ஊர் மக்களின் வாக்குகளை பெற்ற உள்ளூர் அரசியல் தலைமைகளுக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது. அந்த மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு மௌனியாக இருக்க முடியாது.

சாய்ந்தமருது மண் இந்தக் கட்சியை வாழவைத்த மண். இன்றும் அவ்வாறே இருக்கிறது. ஆனால், அவர்களின் தேவை இதுவரைக்கும் பூர்த்தி செய்யப்படாமலிருப்பது குறித்து எனது ஆதங்கத்தைக் கூறவேண்டிய தருணம் இதுவென நினைக்கிறேன். இன்னும் இன்னும் வாக்குறுதி, தீர்மானங்கள் என்றில்லாமல் இப்பிரச்சினைக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்றக் கோரிக்கையாவது நிறைவுக்கு கொண்டுவர காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  வலியுறுத்துகின்றேன்;' எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .