2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சுழற்சிமுறையில் தேசியப்பட்டியல் எம்.பி பதவி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு,பைஷல் இஸ்மாயில்,என்.ஹரன்

இன்னும் ஓரிரு வாரங்களில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சுழற்சி முறையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் வழங்கவுள்ளதாக தன்னிடம் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மை கூடிய விரைவில் மக்களுக்கு தெரியவருமென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இக்கட்டானதொரு நிலைமையைக்; கருத்திற்கொண்டு உதவும் வகையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை தான் பொறுப்பேற்றுள்ளதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் அதனை இராஜினமாச் செய்யுமாறு தலைமைத்துவம் பணித்தால் அதற்கும் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (28) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதன் மூலம் மு.கா. தலைமையினால் அட்டாளைச்சேனைக்கு வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் தட்டிக்கழிக்கப்பட்டுள்ளதாக எவரும் எண்ணக்கூடாது' என்றார்.  

'மு.கா. ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை அந்தக் கட்சிக்கே அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் பக்கபலமாக இருந்துவருகின்றனர். கடந்த தேர்தல் காலத்தின்போது இப்பிரதேச மக்களுக்கு மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமினால் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை' எனவும் அவர் தெரிவித்தார்.

'மேலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை நான் பொறுப்பேற்றதன் மூலம் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருக்கு முழுக்குப் போட்டுவிட்டதாக எவரும் எண்ணக்கூடாது' எனவும் அவர் கூறினார்.   

தற்போது எனக்கு கிடைத்துள்ள இந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை இன, மத, பிரதேச மற்றும் அரசியல் வேறுபாடுகள் பார்க்காது முழு கிழக்கு மாகாணத்துக்கும் என்ற அடிப்படையில் என்னாலான சேவைகளை அர்ப்பணிப்புடன் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X