2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சந்தை வசதியை செய்து தருமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 மே 25 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் மரக்கறி வியாபாரிகளுக்கு சந்தை வசதி செய்து கொடுக்கப்படாத நிலையில், அவ்வியாபாரிகள் ஒவ்வொருவரிடமும் மாதாந்தம் 750 ரூபாய் படி சந்தைக் கட்டணம் அறவிடுவதாக அவ்வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

வீதியோரத்தில்; மரக்கறிகளையும் பழங்களையும்   விற்பனை செய்யும் தங்களிடம் சந்தைக் கட்டணம் அறவீடு செய்யப்படுகின்றமை கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் கூறினர்.

மேலும், அட்டாளைச்சேனை பிரதேச மீன் சந்தையை அப்பிரதேச சபை ஆண்டுக் குத்தகைக்கு விட்டு அதிலிருந்து ஒருதொகைப் பணத்தை பெற்று வருகின்றது. பிரதேச சபைக்கான ஆண்டுக் குத்தகைப் பணத்தை  மீனவர் ஒருவர் செலுத்தி வருகின்றார். இந்நிலையில், தன்னால் குத்தகைக்கு செலுத்தப்படும் பணத்தை ஏனைய மீன் மற்றும் மரக்கறி வியாபாரிகளிடமிருந்து சந்தைக் கட்டணமாக அறவிடுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, சந்தை வசதியின்றிய நிலையில் அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு அருகில் மீன் விற்பனை செய்யப்பட்டமைக்கு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அண்மையில் எதிர்ப்புத் தெரிவித்து அங்கு மீன் விற்பனைக்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, அட்டாளைச்சேனை வாசிகசாலைக்கு அருகில் தற்காலிக மீன் சந்தையை மீன் வியாபாரிகளுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைத்துக் கொடுத்து அங்கு மீன் விற்பனை இடம்பெறுகின்றது.

எனவே, மீனவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தை வசதியைப் போன்று, தங்களுக்கும் சந்தை வசதியை செய்துகொடுக்குமாறு மரக்கறி வியாபாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இது தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபைச் செயலாளர் எல்.எம்.இர்ஸாத்திடம் கேட்டபோது, 'அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு நிரந்தர சந்தை வசதி இல்லை. இது விடயமாக கடந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அக்கூட்டத்தில், சந்தை அமைப்பதற்கான காணியை பெறுமாறும் அதன் பின்னர், சந்தையை அமைப்பதற்கு நிதி வழங்குவதாகவும் பிரதி அமைச்சர் பைஷால் காசிம் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், மீன் வியாபாரிகளுக்கு தற்காலிக சந்தையை பிரதேச சபை அமைத்துக் கொடுத்துள்ளது.  

மீன் சந்தைக்கான குத்தகை பிரதேச சபையால் பெறப்படுகின்றது. அதன் அடிப்படையிலேயே இம்முறையும் குத்தகை பெறப்பட்டுள்ளது. குத்தகையைப் பெற்றுள்ளவர் ஏனையோரிடம் கட்டணம்; அறவிடுவது நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X