2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து நின்று எதனையும் சாதிக்க முடியாது

Sudharshini   / 2016 ஜனவரி 03 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் மௌலானா

கல்முனை மாநகர சபையானது தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டில் இயங்குகிறது என்ற செய்தியை வெளி உலகுக்குக்கொண்டு செல்ல முடியுமாயின் ஐரோப்பிய யூனியனின் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் 2016ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நேற்று (31) மாலை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

'தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து நின்று எதனையும் சாதிக்க முடியாது. இரு சமூகங்களும் ஒன்றிணைவதன் மூலமே எமது அபிலாஷைகளை அடைந்துக் கொள்ள முடியும். கல்முனை அபிவிருத்திக்கு தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை மிகவும் அவசியமாகும்.

எமது மாநகர சபையின் தமிழ் உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமாயின் ஐரோப்பிய யூனியனின் நிதி உதவிகளைப் பெற்று, கல்முனையை அபிவிருத்தி செய்ய முடியும். இன்று இல்லா விட்டாலும் தற்போது நாம் செயற்றிட்டங்களை தயாரித்து, சபையில் நிறைவேற்றி உத்தரவாதங்களைப் பெறுவோமாயின், எதிர்காலங்களில் அவற்றை அமுல்படுத்துவதற்கு ஐரோப்பிய யூனியன் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, எமது மாநகர சபையில் 2015ஆம் ஆண்டு நிறைவுறாத வேலைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு 2016ஆம் ஆண்டு  வரவு-செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை செய்திருக்கிறோம்.

குறிப்பாக சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்த பீச் பார்க்கின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு இருபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருகிறது. இதன் நிர்மாணப் பணிகள் பெருமளவு பூர்த்தியடைந்துள்ள போதிலும் அதில் காணப்படுகின்ற சில குறைபாடுகள் காரணமாக இன்னும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவில்லை.

இந்த பீச் பார்க்கை சில தனியார் நிறுவனங்கள் பொறுப்பேற்று நிர்வகிப்பதற்கு முன்வந்துள்ள போதிலும், அங்கு தேவையாகவுள்ள மலசல கூடம், நீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளையும் சில குறைபாடுகளையும் நிவர்த்தி செய்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் நிமித்தம் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக பொறியியல் பிரிவின் உத்தேச மதிப்பீட்டின் பிரகாரம் எமது 2016ஆம் ஆண்டுக்கான பாதீட்டில்; இருபது இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளோம். கூடிய விரைவில் இவ்வேலைத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு, மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும்.

அதுபோன்று நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்காக இந்த பாதீட்டில் 20 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளோம். அவ்வேலைத் திட்டத்தையும் குறுகிய காலத்தில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேவேளை, எமது மாநகரப் பிராந்தியத்தில் இறைச்சிக்காக மாடறுப்பதற்கு பொருத்தமான விலங்கறுமனையொன்று இல்லாதிருப்பது பெரும் பிரச்சினையாக விஸ்பரூபம் எடுத்துள்ளது. இதனை அமைப்பதற்கும் பணம் தயாராக உள்ளது. ஆனால், பொருத்தமான இடத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். அதனையும் மிகக் கூடிய விரைவில் நிவர்த்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

கல்முனை நகர ஐக்கிய சதுக்க கட்டடத் தொகுதியின் கீழ் தளத்தில் அமைந்துள்ள 30 கடை தொகுதியும், தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் நமது வர்த்தகர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அந்த கட்டடத் தொகுதியின் மேல் மாடியை மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

பழைய தனியார் பஸ் கட்டடம் மாநகர சபையின் வருமானத்தை கருத்திற்கொண்டு அமானா வங்கிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தின் சுற்று வட்டாரத்தை வாகனத் தரிப்பிடத்திற்கு வழங்கி சபைக்கு வருமானம் ஈட்டவும் திட்டமிட்டுள்ளோம்.

தனியார் பஸ்களை அரச போக்குவரத்து பஸ் நிலையத்துடன் ஒன்றிணைப்பு செய்வதற்கு ஏற்ப அதனை மறுசீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளை சீராக முன்னெடுப்பதற்கு இரண்டு கொம்பெக்டர் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்' என்று குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான பாதீடு வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X