2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தரமிறக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வைத்தியசாலை

Niroshini   / 2015 நவம்பர் 08 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்

தரமுயர்த்தப்படும் என அமைச்சர்களால் உறுதிவழங்கப்பட்ட அம்பாறை, அக்கரைப்பற்று பனங்காட்டு கிராமத்திலுள்ள வைத்தியசாலை தரமிறக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் ஆர்.இராமநாதன் தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலை கட்டடத்தில் சனிக்கிழமை(07)நடைபெற்ற புதிய அபிவிருத்திக்குழு தெரிவுக்கான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மறைந்த அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் உதவியோடு துரித அபிவிருத்தி கண்ட வைத்தியசாலை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் காலத்தில் மகப்பேற்று வைத்தியசாலைப் பிரிவையும் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில்,2006ஆம் ஆண்டு 14 ஊழியர்களுடன் செயற்படவும் பிரதேச வைத்தியசாலையாக தரமுயார்த்தப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.புஸ்பகுமாரின் வேண்டுதலின் படி அமைச்சர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவின் காலத்தில் உறுதிமொழி வழங்கப்பட்டது.

இதேவேளை அமைச்சரினால் மகப்பேற்று வைத்தியசாலை திறப்பு விழா செய்யப்பட்டதுடன்; அம்புலன்ஸ் வண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.

இருப்பினும் தரமுயர்த்தப்பட்டதாக பெயர்ப்பலகை மாத்திரமே நடப்பட்டதுடன் மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.

மேலும்,2013ஆம் ஆண்டில் இங்கு கடமையாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 10ஆக குறைக்கப்பட்டதுடன் அம்புலன்ஸ் வண்டிக்காக நியமிக்கப்பட்ட சாரதியும் பிறிதொரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மேலும், கடந்த 06மாதகாலமாக மகப்பேற்று பிரிவு மூடப்பட்டுள்ளதுடன் இரவு நேர வைத்திய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் தற்போது ஊழியர்களின் தொகை 4ஆக குறைக்கப்பட்டுள்ளதாக திறைசேரியின் முகாமைத்துவ சேவை பணிப்பாளரினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன் இவ்வைத்தியசாலை எந்த பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது என்பது கூட தெளிவில்லாமல் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது நடப்பாண்டுக்கான நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
இதன்போது,  தலைவராக வைத்தியர் யு.எல்.எம்.சகீல், செயலாளராக ஆர்.இராமநாதன், பொருளாளாராக கே.ரகுபதி, உபதலைவராக வைத்தியர் எப்.எம்.எ.காதர், உபசெயலாளராக கே.செல்வானந்தம், உறுப்பினர்களாகவி.சந்திரகுமார், பி.புஸ்பராஜா,வி.அமராவதி, எம்.நைனாமலை, ஞா.பாக்கியராஜா, பங்கயமதி, யோகேஸ்வரி, ஆ.நல்லதம்பி, கே.காசுபதி மற்றும் ஆலாசகர்களாக முன்னாள் தவிசாளர் ஆர்.நடராஜா, வி.சுந்தரமூர்த்தி, சே.சந்திரசேகரம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .