2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நெற்பயிர்களில் இலை வெளிறல் நோய்: 500 ஏக்கர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, தம்பிலுவில், சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய கமநல சேவைப் பிரிவுகளில் சுமார் 500 ஏக்கர் நெற்செய்கை, ஒருவகையான இலை வெளிறல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.

இது ஒரு வகையான பக்டீரியாத் தாக்கத்தினால் இலைகள் வெளிறி சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றது.  
இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகள் கிருமிநாசினியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இப்பக்டீரியா நோய்த் தாக்கத்துக்கு கிருமிநாசினி ஒரு மருந்தாக அமைவதில்லை.

இம்மாவட்டத்தில் நிலவும் மாறுபட்ட காலநிலையும்; இந்நோய்த் தாக்கத்துக்கு காரணமென்பதுடன், குறிப்பாக, பொட்டாசியம் குறைபாட்டினாலும் இந்நோய் ஏற்படுகிறது. அத்துடன், நிலத்தின் கீழ் காணப்படும் இரும்பு நஞ்சாதல் பிரச்சினையுள்ள இடங்களிலும் இந்நோய்த் தாக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே, நெல் விதைப்பின்போது அடிக்கட்டுப் பசளையாக வைக்கோல் சேர்த்தும் உரத்துடன் பொட்டாசியத்தைக் கலந்து விசிறியும்; நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, நான்கு அல்லது ஐந்து வாரகாலத்தினுள் மீண்டும் பொட்டாசியத்தை நிலத்தில் விசிறுவதன் மூலம் இந்நோய் ஏற்படாமல் தடுக்க முடியுமெனவும் அவர் கூறினார்.

மேலும், இந்நோய்த் தாக்கம் பற்றியும் எதிர்காலத்தில் இந்நோயிலிருந்து மீளும் வகையிலும் விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் விவசாயப் பிரதேசங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அறுவடைக்குத் தயாரான நிலையிலுள்ள நெற்பயிர்களில் ஒருவகையான இலை வெளிறல் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், தாம் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X