2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மத்தியமுகாம் குடிநீர் விநியோகத் திட்டம் அங்குரார்ப்பணம்

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர்த்தாங்கியினூடான குடிநீர் விநியோகத்திட்டம், ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அத்துடன்  நிர்வாக நடவடிக்கைக்கான அலுவலக கட்டடமும் திறந்து வைக்கப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.என்.கரீம் தெரிவித்தார்.

மத்தியமுகாம் பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில்,  நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குடிநீர் விநியோகத்திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கவுள்ளார்.

இதனடிப்படையில், மத்தியமுகாம் நகரிலுள்ள ஸ்ரீமுருகன் ஆலயம், முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல், லும்மினி விகாரை ஆகிய வழிபாட்டு தலங்களிலேயே குடிநீர் விநியோகத்திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன்மூலம், 1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் குடியேற்றப்பட்ட விவசாயக் கிராமங்களிலுள்ள குடும்பங்களின் நீண்டகாலப் பிரச்சினையாக காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, பிரதேச மக்களின் அவசியத்தேவை கருதி அடையாள ரீதியில் 150ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரை பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீர்த்தாங்கியின் அனைத்து வேலைகளும் பூரணமாக முடிவுறுத்தப்பட்டதன் பின்னர், பிரதேசத்திலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும்  நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.என்.கரீம் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பிரதி அமைச்சர்களான எம்.சீ.பைசால் காசீம், சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கிழக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் யூ.ரத்தினபால, நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் என்.துதேசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X