2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ரெஜினால்ட் குரேயின் கூற்றுக்கு உலமாக் கட்சி கண்டனம்

Thipaan   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

கொழும்பில், தமிழ் மக்கள் காணி வாங்குவது போல், வடக்கில் சிங்கள மக்கள் காணி வாங்குவதில் தவறில்லை என அரசாங்க ஆதரவு குடியேற்றத்துக்கும் சுயமான குடியேறுதலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வட மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே கூறியிருப்பதனைத் தான் வன்மையாகக் கன்டிப்பதாக உலமா கட்சித் தலைவர்  முபாறக் மௌலவி தெரிவித்தார்.

வட மாகாண ஆளுனர் ரெஜினால்ட் குரே  அண்மையில் தெரிவித்த மேற்குறித்த கருத்தினை கன்டிக்கும் வகையில், இன்று  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிருக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் வாழும் மக்கள் எங்கும் வாழலாம், காணிகள் வாங்கலாம் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால், நாட்டில் புரையோடிய இனமுரண்பாடுகளுக்கு காரணம் மக்களின் சுயமான குடியேற்றங்கள் அல்ல மாறாக அரச ஆதவுடனான குடியேற்றங்களே என்பதை மூத்த அரசியல்வாதியான ரெஜினோல்ட் குரே தெரிந்து கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியதாகும்.

ஒரு காலத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே 95 சதவீதம் இருந்தனர். அத்தோடு சிங்கள மக்களும் சுயமாக குடியேறி வாழ்ந்தனர். இவர்களுக்கு மத்தியில் நல்ல பரிந்துணர்வும் சௌஜன்யமான வாழ்வும் இருந்தது. ஆனால் சுதந்திரத்துக்குப் பின் வந்த இனவாத பெருந்தேசியவாத கட்சிகளால் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியால் வெளிமாகாண சிங்கள மக்கள் அரச ஆதரவுடன் அனைத்து கொடுபபனவுகளும் வழங்கப்பட்டு வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட்டனர். இதன் விளைவாகவே வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் அதிகமாயினர்.

அதே நேரம் அரச ஆதரவுடன் எந்தவொரு வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மகனும் கொழும்பில் குடியேற்றப்படவில்லை.

ஆகவே அரச ஆதரவுடனான சிங்கள குடியேற்றம் என்பதற்கும் சுய விருப்பத்துடனான குடியேற்றத்துக்குமிடையிலுள்ள பாரிய வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல், காலாகாலமாக வடக்கில் வாழ்ந்து புலிகளால் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்ட பின் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் மற்றும் யுத்தத்தால் வெளியேறிய கிழக்கு முஸ்லிம்கள் மீண்டும் மீள் குடியேற அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும்.

மேலும், யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து வெளியேறிய சிங்கள மக்களும் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். இதனை விடுத்து அரச ஆதரவுடன் சிங்கள மக்கள் வடக்கு கிழக்கில் குடியேற்றப்படுவதே இனவாத செயற்பாடாகும் என்பதை ரெஜினோல்ட் குரே போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X