2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விளையாட்டினுடாக போதைப் பொருள் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் செயற்றிட்டம்

Gavitha   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

'தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது. இதனைக்கட்டுப்படுத்தும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் பேரில், விளையாட்டினூடாக போதைப் பொருள் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் செயற்றிட்டம், முன்னெடுக்கப்பட்டுள்ளது' என்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.ஹப்பார் தெரிவித்தார்.

மருதமுனை பறகத்டெக்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் கல்முனை பொலிஸ் நிலையத்தால் நடத்தப்படவுள்ள 'விளையாட்டினுடாக போதைப் பொருள் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் செயற்றிட்டம்' என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி-2016 தொடர்பாக,  ஊடகவியலாளர்களுக்கும் பாடசாலைகளின் விளையாட்டு ஆசிரியர்களுக்கும் விளக்கமளிக்கும் சந்திப்பு நேற்று புதன்கிழமை (27) மருதமுனை பறகத்டெக்ஸ் நிறுவனத்தின் மண்டபமொன்றில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்  போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கல்வி கற்கவேண்டி இளைஞர் சமூகம், போதைப்பொருள் பாவனைகளுக்கு அடிமைகளாகி சீர்குலைந்து இருக்கின்றனர். அவ்வாறானவர்களை அதிலிருந்து மீட்பதற்கும் அவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்குமே இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது' என்று அவர் கூறினார்.

'எதிர்வரும் மே மாதம் 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் மற்றும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை மைதானம் ஆகியவற்றில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இச்சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பன்னிரெண்டு முன்னணிப் பாடசாலைகளைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட மாணவர் அணிகள் பங்குபற்றவுள்ளன
இச்சுற்றுப் போட்டியில் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு பறகத் நிறுவனத்தின் அனுசரணையில் பொலிஸ் வெற்றிக்கிண்ணமும் சான்றிதளும், விளையாட்டுச் சீருடைகளும் வழங்கப்படவுள்ளது. மேலும் இப்போட்டியில் பங்குபற்றும் அனைத்து  வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதுடன் சிறந்த ஆட்டக்காரர்களுக்கான கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளது' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X