2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விவசாயம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும்

Suganthini Ratnam   / 2016 மே 24 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிரான், கோமாரி ஆகிய பிரதேசங்களில் தங்களின் விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து நிந்தவூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிரான் -கோமாரி விவசாயிகள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள்,   'உள்ளூர் அரசியல்வாதிகளும்; அதிகாரிகளும இணைந்து தங்களின் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.

கிரான், கோமாரி ஆகிய பிரதேசங்களில் 177 விவசாயிகளுக்குச் சொந்தமான 885 ஏக்கர் விவசாயக் காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கு வனபரிபாலனத் திணைக்களம் மற்றும் இராணுவத்தினரும் தடை விதித்துள்ளனர். இத்தடையை நீக்க வேண்டும்' எனவும்   கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதியில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி.வணிகசிங்கவிடம் கையளிப்பதற்கான மகஜரை நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யூ.அப்துல் ஜெலீலிடம் கிரான்- கோமாரி விவசாயிகள் அமைப்பின் தலைவர் ஐ.எல்.அஹமட் லெப்பை வழங்கினார்.

இதன்போது, விவசாயிகள் எதிர்நோக்குகின்ற இக்காணிப் பிரச்சினை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என நிந்தவூர் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிரான்- கோமாரி விவசாயிகள் அமைப்பின் தலைவர் ஐ.எல்.அஹமட் லெப்பை தெரிவிக்கையில், '1960 -1967ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஐந்து ஏக்கர் படி கிரான், கோமாரி ஆகிய பிரதேசங்களில் காணிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்தக் காணிகளில் காணப்பட்ட பற்றைகளை வெட்டி விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வந்திருந்தோம். இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக அக்காணிகளில் விவசாயச்; செய்கையில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனை அடுத்து எமது விவசாயக் காணிகளிலும்; செடிகள் வளர்ந்து பற்றைகளாகக் காட்சி அளித்தன' என்றார்.

'யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தற்போது சமாதானச் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்,  தங்களின் காணிகளில் விவசாயம் செய்வதற்குச் சென்றபோது, வனபரிபாலனத் திணைக்களம் மற்றும்  இராணுவத்தினரால் விரட்டப்பட்டு தங்களின் காணிகளில் விவசாயம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காணிகளில் விவசாயம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக அம்பாறை மாவட்டச் செயலாளர் மற்றும் அரசியல் தலைமைகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.  இதனை அடுத்து, பொத்துவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் மூன்று தடவைகள்; காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு, காணி அனுமதிப்பத்திரங்கள் சரி பார்க்கப்பட்டும் காணி அமைச்சின் அதிகாரிகள் அப்பிரதேசங்களுக்குச் சென்றும் பார்வையிட்டுள்ளனர்.

மேலும், 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி இந்தக் காணிப் பிரச்சினை தொடர்பாக பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இருந்த நீல் டி.அல்விஸ் இக்காணிகளுக்குப் பதிலாக வேறு காணிகள் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதுவும் நடைபெறாமல் ஏமாற்றம் அடைந்துள்ளோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X