2025 மே 21, புதன்கிழமை

வட மாகாண சபைக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது

Niroshini   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா,பி.எம்.எம்.ஏ.காதர்

“கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுவதற்கோ வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்று பிரகடனம் செய்வதற்கோ வடபுலத் தமிழர்களுக்கும் வட மாகாண சபைக்கும் எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது” என கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும், “முஸ்லிம் தன்னாட்சிப் பிராந்திய அலகு என்பது நடைமுறைச் சாத்தியமற்றதும் இன முரண்பாட்டை கூர்மையடையச் செய்வதற்குமான யோசனை” என்றும் அந்த சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் அந்த சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் மௌலவி இசட்.எம்.நதீர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வடமாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மெழிவுகளில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகள் சரியாக இனங்காணப்படவில்லை. குறிப்பாக அத்தீர்வுத் திட்ட முன்மொழிவுகளில் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் முறையாக உள்வாங்கப்படவில்லை.

இலங்கையானது பெரும்பான்மையாக தமிழ்பேசும் பிரதேசங்களைக் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும்  சிங்களம் பேசும் பிரதேசத்தைக் கொண்ட ஏனைய ஏழு மாகாணங்கள் மற்றொரு மாநிலமாகவும் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் வட, கிழக்கில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஓர் அலகாகவும் மலையகத் தமிழர் ஓர் அலகாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ள முன்மொழிவுகள் முஸ்லிம்களால் ஏற்றக் கொள்ளப்பட முடியாதவைகளாகும்.

இலங்கையை இரண்டு மாநிலங்களாகப் பிரித்தல் என்ற கோரிக்கையானது மறைமுகமாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் ஒரு நடவடிக்கையாகவே கிழக்கு முஸ்லிம்கள் நோக்குகின்றனர். வடக்குடன் கிழக்கை வலிந்து இணைக்கும் எந்த நடவடிக்கைக்கும் முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் எதிர்ப்புக்கள் வலுவடைந்துள்ள நிலையில் அதனைத் திணித்து, தமது அரசியல் அதிகார இலக்கை வேறுவிதமாக அடைந்து கொள்ள தமிழர் தரப்பு முயற்சிக்கின்றது என்ற நியாயமான அச்சம் இதன்மூலம் முஸ்லிம்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.

 கிழக்கிலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழர்க்ள 39.79சதவீதத்தைக் கொண்ட ஒரு சிறுபான்மையினர் என்பதையும் கிழக்கின் மூன்று மாவட்டங்களில் இரண்டில் தமிழர் சிறுபான்மையினர் என்பதையும் தமிழர்தரப்பு எப்பொழுதும் மனதில் வைத்திருத்தல் வேண்டும்.

கிழக்கில் சிறுபான்மையினரான தமிழர்கள், தனது இனத்தை பெரும்பான்மையினராகக் கொண்ட வட மாகாணத்துடன் இணைவதன் மூலம் அங்கு வாழும் ஏனைய இனத்தவரை சிறுபான்மையினராக்கி அவர்கள் மீது அதிகார மேலாதிக்கத்தை பிரயோகிக்க முனையும் ஒரு மறைமுக முயற்சியாகவுமே இது கருதப்பட வேண்டும். மற்றப்படி முஸ்லிம் தன்னாட்சிப் பிராந்திய அலகு என்பதெல்லாம் நடைமுறைச் சாத்தியமற்றதும் இன முரண்பாட்டை கூர்மையடையச் செய்வதற்குமான யோசனைகளேயன்றி வேறில்லை.

மாகாணங்களுக்கு சமஸ்டி என்ற பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ உச்ச அதிகாரம் வழங்கப்படுவதை முஸ்லிம்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. முஸ்லிம்களின் கோரிக்கையும் அதுதான். ஆனால் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சினையாகும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வடக்குடன் கிழக்கை இணைக்கும் முயற்சிக்கு கிழக்கின் முஸ்லிம் சமூகம் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்பதை தமிழர் தரப்புக்கு மாத்திரமல்ல முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் அழுத்தமாகத் தெரிவிக்க விரும்புகின்றோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X