2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வடக்கு , கிழக்கு இணைப்பு விவகாரம்: மு.காவிடம் ஆலோசனை பெறப்படவில்லை

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -யூ.எல். மப்றூக்

வடக்கு , கிழக்கு இணைப்புக்கோ அல்லது வடக்கிலிருந்து கிழக்கை பிரிப்பதற்கோ முஸ்லிம் காங்கிரஸின் ஆலோசனை பெறப்படவில்லை. சர்ச்சைக்குரியதும் சிக்கலானதுமான இந்த விடயத்தில் கருத்துக் கூறவேண்டிய அவசியம் எதுவும் தற்போதைக்கு இல்லை  என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

மேலும், இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு வழிவகுக்கும் வகையில், உத்தேச அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது, சகல சமூகத்தினரையும் திருப்திப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ஹக்கீம், உயர் ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்.

தென்னாபிரிக்கா உயர் ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், அமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல், செவ்வாய்க்கிழமை(19) பிற்பகல், அவரது அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தென்னாபிரிக்கா நீண்ட காலமாக அதிக கரிசணை செலுத்தி வருவதோடு, நிற வேற்றுமை, இன முறுகல் என்பன ஆழமாக வேரூன்றியிருந்த தென்னாபிரிக்காவில் சுமூக நிலைமை ஏற்படுவதற்கு பங்களிப்புச் செய்த 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' வின் அனுபவம், இலங்கை போன்ற நாடுகளுக்கும் சிறந்த முன் உதாரணமாக திகழ்வதாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது என்றார்.

தேசிய அரசாங்கத்தின் சிறந்த அணுகுமுறையின் பயனாக ஐ.நா.மனித உரிமை பேரவையில், ஜெனீவா பிரேரணையில் மாற்றம் ஏற்பட்டது குறித்தும் உயர் ஸ்தானிகரிடம் அமைச்சர் நினைவுபடுத்தினார்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், புதிய அரசியலமைப்பை வரைவதற்கு வாய்ப்பாக நாடாளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக செயற்பட இருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இனப் பிரச்சினை தீர்வுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஆதரவு நல்குவார்கள் என தாம் நம்புவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இதன்போது, தென்னாபிரிக்க அரசியலமைப்பின் கையடக்கமான பிரதியொன்றையும் உயர் ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், அமைச்சர் ஹக்கீமிடம் கையளித்தார்.                                                                                                                                                                                                         
                                       
                                                             

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X