R.Tharaniya / 2025 நவம்பர் 26 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இலவச சமுர்த்தி, முதியோர் உதவி, சிறுநீரக நோய்த் திட்டம், ஊனமுற்றோர் உதவித் திட்டம் மற்றும் பொது உதவி என்பன தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், அஸ்வெசும திட்டமும் நடைமுறையில் இருக்கிறது.
நாட்டின் மக்கள் தொகையில் ஏழ்மையானவர்களில் 31 சதவீதமானோர் மட்டுமே சமுர்த்தியைப் பெறுகிறார்கள், அதே நேரத்தில் ஆச்சரியப்படும் விதமாகப் பணக்காரர்களில் 4 சதவீதமானோர் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏதோவொரு மானியத்தைப் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவசத் திட்டங்களை அனுபவிக்கவேண்டிய பலர் இன்னுமே அனுபவிக்காமல் இருக்கின்றனர். ஆவண குறைபாடுகளைக் காரணம் காண்பித்துப் புறக்கணிக்கப்பட்டுவிடுகின்றனர். இன்னும் பலர் வேண்டுமென்றே விடுபட்டவர்களாக இருக்கின்றனர்.
எனினும், எந்தவகையிலும் பாதிக்கப்படாதவர்கள் அஸ்வெசும திட்டத்தின் ஊடாக பணம் பெற்றுவருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
அஸ்வெசும திட்டத்தின் ஊடாக நிதி பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மரணமடைந்தவர்களும் அந்த நிதியைப் பெறுவதாகச் சொல்லப்படுகின்றது.
ஆகையால், அஸ்வெசும பயனாளிகளை மறுசீரமைக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும், அதற்கான திட்டத்தை உரிய முறையில் முன்னெடுக்கவேண்டும்.
நாடளாவிய ரீதியில் அஸ்வெசும பயனாளர்களின் விபரங்களைப் புதுப்பிக்கும் திட்டம் சுமார் ஒன்றரை வருடத்திற்குப் பிறகு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகையால், பயனாளிகளைத் தெளிவுபடுத்த வேண்டும். மலையகம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பாடல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அஸ்வெசும பயனாளர்களின் விபரங்களைப் புதுப்பிக்கும் திட்டத்தின் ஊடாக, இறந்தவர்களின் பெயர்களை நீக்கவேண்டும். அத்துடன், இதுவரையிலும் இந்த உதவி கிடைக்காதவர்களை இணைக்கவேண்டும். அதற்கான திட்டத்தை வகுத்தல் அவசியமாகும். அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிப்போர், வயதானவர்கள், இயலாதவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம் போதியளவான ஆவணங்கள் கைவசம் இருக்காது.
ஆகையால், ஒவ்வொரு கிராம சேவர் பிரிவுகளிலும் நடமாடும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, தேசிய அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதல், உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்க முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதன்பின்னர், புதுப்பிக்கும் திட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.
இல்லையேல், நலன்புரி திட்டங்களில் உள்ளீர்க்கப்படவேண்டியவர்கள், எவ்விதமான உதவிகளும் இன்றி இருப்பார்கள்.அத்துடன், அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வங்கிக்கணக்கின் ஊடாகவே வைப்பிலிடப்படுகின்றது. ஆகையால், கணக்கை திறக்க வங்கிக்கு வரும்போது.
இலகுவான முறையில், எவ்விதமான காத்திருப்புகளும் இன்றி வங்கிக்கணக்கை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தல் அவசியமாகும். இல்லையேல், வங்கிக்கும் முன்பாக, பல நாட்கள் இராப்பகலாக பலரும் காத்திருந்ததாக கடந்தகாலங்களில் அவதானித்தோம்.
அரசாங்கத்தின் கீழிருக்கும் திணைக்களங்களில் சரியான தரவுகள் இல்லை என்றக் குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், தற்போது முன்னெடுக்கப்படும் டிஜிட்டல் முறைமையை விஸ்தரப்பதன் ஊடாக, உடனடியாக தகவல்களை பெறமுடியும். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிரடியாக ஆரம்பிக்கவேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும்.
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago