Janu / 2026 ஜனவரி 18 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவித்து வருடாந்தம் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகையாக தைப் பொங்கல் திருநாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. அத்துடன், தமிழர்களின் தை மாதப் பிறப்பாகவும் இந்நாள் அமைந்திருப்பதுடன், சுப காரியங்களில் ஈடுபட ஆரம்பிக்கும் மாதமாகவும் அமைந்துள்ளது.
இம்முறை இலங்கையில் இந்த தைப் பிறப்புடன் கூடவே வலியும் பிறக்கவுள்ளதாக அறிந்து கொள்ள முடிகின்றது. அதில், மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. அதற்கான யோசனையை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைத்துள்ளது. அத்துடன், தெருவிளக்குகளுக்கான மின்சாரக் கட்டணத்தை பொதுமக்களே செலுத்தும் வகையில் திட்டமொன்று வகுக்கப்பட்டள்ளதாக அறியமுடிகின்றது.
பொங்கலுக்கு முன்னதாகவே எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, ஒரு சிலபொருட்களின் விலைகளும் கைக்கு புலப்படாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எடுக்கும் சம்பளம் ஒரு மாதத்துக்கு முன்னரே முடிந்துவிடுகின்றது. மிகுதி இருக்கும் நாட்களில் ஓரிரு வேளைகள் பட்டினியில் காலத்தை கடத்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். பலரும் மெளனமாக இருந்துவிடுகின்றனர். பெருமளவானோர் தமது தொழிலை பெரும் சிரமத்துக்கு மத்தியில் தக்க வைத்துக் கொள்கின்றனர்.
கொரோனாவுக்கு முன்னர் முழு மாதத்துக்கு தேவையான பொருட்களை ஒரே தடவையில் கொள்வனவு செய்தவர்கள், பின்னர் இரண்டு வாரங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்தனர், இது பின்னர் 1 வாரமாக குறைந்தது. தற்போது வெறும் நான்கு நாட்களுக்கு போதுமான பொருட்களை கொள்வனவு செய்யும் நிலை தோன்றியுள்ளது. ஒருசிலர், அன்றாடம் கையில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப, மிகவும் விலைக்குறைந்த அதுவும் அன்றைய நாளுக்கு உரிய பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்கின்றனர்.
தமது செலவுகளை இயன்றளவு குறைக்க முனையும் சூழலில், வியாபாரங்களும் அவ்வாறான நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளன. கட்டண அதிகரிப்பால் அவற்றின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன. இவற்றை ஈடு செய்ய மாற்று வழிகளைத் தேடுவதில் நிறுவனங்களின் நிர்வாகங்கள் கவனம் செலுத்துகின்றன. அந்த சூழலில், பொது மக்களின் நுகர்வும் குறைவதால், பல நிறுவனங்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட முன்மொழிவுகள் ஜனவரி மாத்தில் இருந்தே அமல்படுத்தப்படும். அவ்வாறாயின், அரச ஊழியர்களுக்கு ஒருசில சலுகைகள் கிடைக்கும். தனியார் துறைகளைச் சேர்ந்தவர்கள் வெறுங்கையுடன் காலத்தை ஓட்டவேண்டும். எனினும், விலை, கட்டண அதிகரிப்பு சலருக்கும் சமமானதாகவே இருக்கும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை பலர் மத்தியிலும் காணப்படுகின்றது. இம்முறையும் வழி பிறக்கும் என்ற காணப்பட்டாலும், தை பிறப்புடன் கூடவே வலி தான் அதிகமாக அமைந்திருக்கும் என்பதை கள நிலைவரங்கள் காண்பிக்கின்றன.
15.01.2026
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026