2025 மே 09, வெள்ளிக்கிழமை

வணிகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

Mayu   / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூரு நோக்கி லைபீரியா நாட்டு கொடியுடன் எம்.வி. செம் புளூட்டோ என்ற சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்தது.

இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய இந்திய பெருங்கடல் பகுதியில் குஜராத் வெராவத் நகரில் இருந்து சுமார் 200 மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்த போது அந்தக் கப்பல் மீது திடீரென டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் கப்பலில் தீப்பற்றியுள்ளது. கப்பலின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது.

அந்த சரக்கு கப்பலில் 21 இந்திய பணியாளர்கள் மற்றும் ஒரு நேபாளி ஆகியோர் இருந்துள்ளனர்.அரபிக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நடந்த இந்த தாக்குதல் இந்தியாவை குறிவைத்து நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த டிரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“காசா விவகாரத்தில் ஈரான் அளித்து வரும் ஆதரவினால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி வரும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பாட்டில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று ஈரான் கூறி வந்தாலும் கள நிலவரம் இதுவாகவே உள்ளது. இந்திய பணியாளர்களுடன் வந்த சரக்கு எண்ணெய் கப்பலை தாக்கிய டிரோன் ஈரானில் இருந்து தான் ஏவப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

செங்கடலுக்கு அப்பால் வணிக கப்பல் போக்குவரத்துக்கு விரிவடைவதை விரும்பாமல் ஈரான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

பலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்து வருகிறார்கள்.

செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கிச் செல்லும் கப்பல்களை தாக்குவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து நடுக்கடலில் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அந்தக் கடற்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல்மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X