2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அமெரிக்காவில் பெரும் துயரம்: 3 சகோதரிகள் சடலங்களாக மீட்பு

Editorial   / 2025 ஜூன் 06 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட 3 சகோதரிகளும் சடலங்களாகமீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  பேட்டினு (வயது 9), எவலின் (வயது 8),  மற்றும் ஒலிவியா( வயது 5)  ஆகிய மூன்று சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

 வென்டாச்சியில் உள்ள தங்கள் வீட்டை விட்டுத் தங்களது தந்தையுடன் காரில் கடந்த மே 30ஆம் திகதி வெளியே சென்ற நிலையில் இவர்கள் மாயமாகியுள்ளனர். சிறுமிகளும் கணவரும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த சிறுமிகளின் தாயார், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தக் கோரச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயாரின் முறைப்பாட்டையடுத்து, சிறுமிகளைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், அவர்கள் பயணித்த வாகனத்தில் இருந்தே சடலங்களாக மீட்டுள்ளனர். இந்த வாகனத்தில் இரத்தக்கறை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மர்மமான சூழ்நிலையில், சிறுமிகளின் தந்தையான ட்ராவிஸ் டெக்கர் (Travis Decker) தலைமறைவாகியுள்ளார்.

முன்னாள் இராணுவ வீரரான ட்ராவிஸ் டெக்கர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏதோ ஒரு கோரமான சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

தற்போது, தலைமறைவாகியுள்ள ட்ராவிஸ் டெக்கரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் முழு பின்னணியையும், சிறுமிகளின் மரணத்திற்கான காரணத்தையும் கண்டறிய பொலிஸார் முழு வீச்சில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு தந்தையே தனது குழந்தைகளைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகியிருக்கலாமா என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம், குடும்ப வன்முறை மற்றும் மனநலப் பிரச்சினைகளின் தீவிரமான விளைவுகளை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X