2025 நவம்பர் 05, புதன்கிழமை

அரசியல் வியூக நிபுணருடன் ரஜினி

Editorial   / 2019 செப்டெம்பர் 25 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மும்பையில், நடிகர் ரஜினிகாந்தும், அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் சந்தித்துப் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், புதிய கட்சி துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அதற்காக, தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், நாடாளுமன்ற கீழ்ச்சபைக்கான தேர்தல், சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கு வியூகம் அமைத்து தருவதில் அகில இந்திய அளவில் பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர் ஆவார். இவர் தலைமையில் உள்ள நிறுவனம், பல கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற கீழ்ச்சபைக்கான தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும் பிரசாந்த் கிஷோர் காரணமாக இருந்தார். சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற, இவர் தான் பின்னணியில் இருந்தார்.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோரை தமிழ்நாட்டிலுள்ள சில அரசியல் கட்சித் தலைவர்கள் அணுகியுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் கமல் ஹாசன் ஆகியோர், ஏற்கெனவே, பிரசாந்த் கிஷோரிடம் பேச்சு நடத்தி உள்ளனர்.

இதேவேளை, சமீபத்தில் மும்பையில், நடிகர் ரஜினியும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து பேசியுள்ளனர். இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழக தலைமைக்கு உள்ள செல்வாக்கு குறித்தும இருவரும் விவாதித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர் தரப்பினர் எடுத்துள்ள மதிப்பீடு குறித்தும் பேசப்பட்டு உள்ளது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X