2025 நவம்பர் 05, புதன்கிழமை

அலெப்போவில் றொக்கெட்டுகளால் ‘பொதுமக்கள் ஆறு பேர் கொல்லப்பட்டனர்’

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போவின் வட நகரத்தில் இஸ்லாமிய ஆயுததாரிகளால் நேற்று ஏவப்பட்ட றொக்கெட்டுகளால் பொதுமக்கள் ஆறு பேர் கொல்லப்பட்டதுடன், எட்டுப் பேர் காயமடைந்ததாக சிரிய அரச செய்தி முகவரகமான சனா தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளின் றொக்கெட் தாக்குதலில் புறநகர்ப் பகுதிகள் இரண்டு தாக்கப்பட்டதாகவும், 2016ஆம் ஆண்டு இறுதியில் முழுக்கட்டுப்பாட்டையும் சிரிய அரசாங்கம் மீளப் பெற்ற அலெப்போ வட நகரத்தின் மாநகரக் கட்டடமொன்றை ஒரு றொக்கெட் தாக்கியதாக சனா மேலும் கூறியுள்ளது.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியதுடன், காயமடைந்த சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அலெப்போவின் வட நகரத்தை, அலெப்போவின் மேற்கிலுள்ள இஸ்லாமிய ஆயுததாரிகளே நேற்று காலை முதல் இலக்கு வைப்பதாக றமி அப்டெல் ரஹ்மான் கூறியுள்ளார்.

இந்நிலையில், றொக்கெட்டுகள் மூலம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இராணுவம் பதிலளிப்பதாக சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான அல்-வடான் பத்திரிகை, தனது டெலிகிராம் செயலியில் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், அலெப்போவைத் தாக்கிய றொக்கெட்டுகளை யார் ஏவியதென்பது உடனடியாக தெளிவில்லாமலுள்ளது.

அலெப்போவுக்கு அருகிலுல்ள இட்லிப் மாகாணம், மேற்கு அலெப்போ புறநகர் உள்ளடங்கலான அருகிலுள்ள பிராந்தியங்களில் அல்-கொய்தாவின் முன்னாள் சிரியப் பிரிவான ஹயாட் தஹ்ரிர் அல்-ஷாம் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளில் சிறிய இஸ்லாமிய ஆயுததாரிக் குழுக்களும் காணப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X