ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் டுபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்-னின் மூத்த மகன் தான் ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம்.
இவர் டுபாயின் பட்டத்து இளவரசராகவும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், ஷேக் ஹம்தான் சில தினங்களுக்கு முன்னர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். குறித்த வீடியோவில் ‘வீதியில் வாகனங்கள் வேகமாகச் செல்லும் வேளையில் உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் வீதியின் மையத்தில் காணப்பட்ட இரு பெரிய கற்களை தூக்கிக்கொண்டு வீதியின் ஓரத்தில் போட்டுவிடுவது போன்று உள்ளது.

இது குறித்து இளவரசர் "டுபாயில் நற்செயல்கள் பாராட்டப்பட வேண்டும்" எனக்குறிப்பிட்டு அவரை கண்டுபிடித்துத்தரும்படி கோரிக்கையும் வைத்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் சென்றிருக்கிறது. கொஞ்ச நேரத்தில் அந்த இளைஞரை கண்டுபிடிக்கும் பணியில் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அதன்பலனாக அந்த இளைஞர் பெயர் அப்துல் கஃபூர் என்பது தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து இளவரசர் குறித்த இளைஞரை தொலைபேசியில் அழைத்து அவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, தற்போது தான் வெளிநாட்டில் இருப்பதாகவும் விரைவில் நாடு திரும்பியவுடன் அவரை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த இளைஞரின் புகைப்படத்தையும் இளவரசர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.