2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

எலிசபெத் மறைவு: அடுத்த 10 நாட்கள் நடைபெறும் வழக்கம் என்ன

Editorial   / 2022 செப்டெம்பர் 11 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபத்தின் இறுதிச் சடங்கு 10 நாட்களுக்குப் பின் நடைபெற உள்ளது. அரசு முறைப்படி இந்த 10 நாட்களில் என்ன நடைபெறும் என்பதை தற்போது பார்க்கலாம்.

முதல் நாளில், மகா ராணியின் இறப்பு குறித்து இங்கிலாந்து பிரதமர் மக்களுக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையை வெளியிடுவார். இதையடுத்து, புதிய மன்னர், தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

இரண்டாம் நாளில், பிரிட்டன் மன்னர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக்கொள்வார். அரச குடும்பத்திற்கு ஆலோசனை கூறும் குழு உறுப்பினர்கள், நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள், மூத்த மத குருமார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பர். பதவியேற்றவுடன், லண்டனில் உள்ள ஹைட் பூங்காவில் பீரங்கிகளில் 41 குண்டுகள் முழங்க, மரியாதை செலுத்தப்படும்.

பின்னர், பிரபல இலண்டன் டவரின் மீது நின்று 62 துப்பாக்கி குண்டுகள் முழங்க மன்னருக்கு வணக்கம் செலுத்தப்படும். இதன் பின்னர், பாரம்பரிய வழக்கப்படி, புதிய மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையின் பால்கனியில் இருந்து அறிவிக்கப்படும்.

மூன்றாவது நாளில் ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவர்.

நான்காவது நாளில் ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு இரண்டாம் எலிசபத்தின் உடல் கொண்டு வரப்படும்.

5 ஆவது நாளில் பக்கிங்ஹாம் அரண்மனையில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும். இங்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறாம் நாளில் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். பின்னர், அங்கு 3 நாட்களுக்கு அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும். நள்ளிரவில் 15 நிமிட இடைவேளையை தவிர நாள் முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவர்.

ஏழாம் நாளில், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபத்தின் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

10 ஆவது நாளில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனையைக் கடந்து, வின்ட்சர் கேஸ்டலுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பின்னர், கணவர் பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே, இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X